'மழை விட்டதும் குடை பாரமாகிவிடும்' - மும்பை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பொல்லார்ட் பதிவு


மழை விட்டதும் குடை பாரமாகிவிடும் - மும்பை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பொல்லார்ட் பதிவு
x

ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு திண்டாடிய மும்பைக்கு ரோகித் சர்மா கேப்டனான முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

மும்பை,

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக தங்களின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என்று அறிவித்தது அந்த அணி ரசிகர்களிடம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு திண்டாடிய மும்பைக்கு ரோகித் சர்மா கேப்டனான முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதே வேகத்தில் குறுகிய காலத்தில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் மும்பை வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஆனால் கோடிகளை கொடுத்தாலும் கோப்பைகளை வெல்ல முடியாமல் திண்டாடும் பல அணிகளுக்கு மத்தியில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விடுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது . அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் அந்த அணியை பின்தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் அந்த அணியின் வீரர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பையின் இந்த முடிவுக்கு மறைமுகமான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைரன் பொல்லார்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில்"மழை முடிந்ததும் அது வரை உதவிய குடை அனைவருக்கும் பாரமாகி விடும். அதே போல தான் பயன்பெறுவது நின்று விட்டால் விசுவாசமும் நின்று விடும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதை பார்க்கும் ரசிகர்கள் ஹர்டிக் பாண்ட்யாவுக்காக ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பொல்லார்ட் இப்படி பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.


Next Story