அரையிறுதிக்கு செல்வது யார்..? இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா இடையே கடும் போட்டி


அரையிறுதிக்கு செல்வது யார்..? இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா இடையே கடும் போட்டி
x

அரையிறுதியை உறுதிசெய்ய நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். குரூப் 1ஐ பொறுத்தவரையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் அடியெடுத்துவைத்துள்ளது. ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.

இந்த நிலையில், குரூப் 2 ஐ பொறுத்தவரையில் நெதர்லாந்து அணி வெளியேறிவிட்டது. ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடித்தாலும், புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகளும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன.

இதில் அரையிறுதிக்கு முன்னேற இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும். நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றால், தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறும்.

ஆனால் பாகிஸ்தானுக்கு அப்படியல்ல.. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். மேலும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்க வேண்டும். அல்லது மழை காரணமாக நெதர்லாந்து- தென் ஆப்பிரிக்கா ஆட்டம் தடைபட வேண்டும். அப்போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.

இதில் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவை முந்தினால், பாகிஸ்தானால் அரையிறுதிக்கு செல்ல வேண்டும். ஆகையால், குரூப் 2ஐ பொறுத்தவரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க் அணிகளுக்கே அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.

வங்காளதேச அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால், அந்த அணி நாளை பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். முக்கியமாக தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோல்வியடைந்தால், வங்காளதேசத்துக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கும் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கு அந்த அணி இந்தியாவை மிகப்பெரிய அளவில் வீழ்த்தவேண்டும். மேலும், தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோற்க வேண்டும். பாகிஸ்தான் - வங்காளதேச அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் தடைபடவேண்டும்.

இவ்வாறு நிகழ்ந்தால், ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்காவை விட முந்தியிருந்தால், ஜிம்பாப்வேயால் அரையிறுதிக்கு செல்லமுடியும். ஆனால் அவ்வாறு நிகழ்வது எளிதான விஷயம் கிடையாது என்பதே உண்மை.


Next Story