ஆசிய கிரிக்கெட் கோப்பையை வெல்லப்போவது யார்..? இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி), இலங்கை (2 வெற்றி, ஒரு தோல்வி) தலா 4 புள்ளிகள் பெற்றன. ரன்-ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ரன்-ரேட் அடிப்படையில் வங்காளதேசம் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 4-வது இடமும் பெற்று நடையை கட்டின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.
இந்தியா-இலங்கை மோதல்
இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தானுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை விரட்டியடித்தது. சூப்பர் 4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும் அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கடைசி ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியில் விராட்கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது தோல்விக்கு ஒரு காரணமாகும்.
விராட் கோலி
ஓய்வு அளிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் இன்றைய முக்கிய மோதலுக்கு திரும்புவதால் இந்திய அணி பழைய பலத்தை எட்டும். பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்கள்), ரோகித் சர்மா (194), லோகேஷ் ராகுல் (169), விராட்கோலி (129), இஷான் கிஷனும் (120), பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் வலுசேர்க்கிறார்கள்.
இலங்கை அணியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. உள்ளூர் சூழலில் அவர்கள் எந்தவொரு அணிக்கும் கடும் சவால் அளிக்கக்கூடியவர்கள். நடப்பு சாம்பியனான இலங்கை அணி லீக் சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும், 2 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியது. சூப்பர்4 சுற்றில் 21 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை மீண்டும் வதம் செய்தது. அடுத்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. கடைசி ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்ததுடன் இறுதிப்போட்டியையும் எட்டியது.
தீக்ஷனா விலகல்
இலங்கை அணியில் பேட்டிங்கில் குசல் மென்டிஸ் (253 ரன்கள்), சமரவிக்ரமா(215), அசலங்காவும் (179), பந்து வீச்சில் பதிரனா, வெல்லாலகே, ஆல்-ரவுண்டர்கள் அசலங்கா, தசுன் ஷனகாவும் நல்ல நிலையில் உள்ளனர்.தொடரில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனா தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதால் இறுதிப்போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இது அந்த அணிக்கு இழப்பாகும். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் துஷன் ஹேமந்தாவுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர்4 சுற்றில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் 2018-ம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் ஆசிய கோப்பையை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் அதிகபட்சமாக 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்தியாவின் சாதனையை சமன் செய்ய இலங்கை அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மெதுவான தன்மை கொண்ட இந்த மைதானத்தில் நடப்பு தொடரில் நடந்த 6 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி 5-ல் வெற்றி கண்டுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
மழை பெய்ய வாய்ப்பு
கொழும்பில் இன்று மாலையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆட்டம் மழை பாதிப்புக்கு ஆளானால் மாற்று நாள் (ரிசர்வ் டே) ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டு தொடர முடியாமல் போனால் அந்த நிலையில் இருந்து அடுத்த நாள் ஆட்டம் தொடங்கி நடைபெறும்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 166 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 97 ஆட்டங்களில் இந்தியாவும், 57 ஆட்டங்களில் இலங்கையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 11 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.
பிற்பகல் 3 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், இஷான் இஷன் அல்லது திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா,
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, துஷன் ஹேமந்தா, பதிரனா, கசுன் ரஜிதா.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர்?
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் இன்ைறய ஆட்டத்தில் ஆடமாட்டார். அவருக்கு மாற்றாக அழைக்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இலங்கை சென்றடைந்தார். வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும்.