தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட்


தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட்
x

Image Courtesy : @BCCI twitter

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இன்றைய ஆட்டத்தின் வெற்றி தொடரை வெல்வதற்கு மட்டுமல்ல, தரவரிசையில் இந்தியா 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைப்பதற்கும் அவசியமாகும். அதே நேரம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியினர் அதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர்.

சென்னையில் 3¼ ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி அரங்கேறுவதால் ரசிகர்களும் போட்டியை காண ஆர்வமுடன் உள்ளனர். டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுதீர்ந்து விட்டன. ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் ஆட்டம் என்ற வகையிலும் இது கவனத்தை ஈர்த்துள்ளது.


இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர் அல்லது நாதன் எலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.


Next Story