நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு அணைபோடுமா ஆப்கானிஸ்தான்? சென்னையில் இன்று மோதல்


நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு அணைபோடுமா ஆப்கானிஸ்தான்? சென்னையில் இன்று மோதல்
x

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

சென்னை,

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள தனது 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், சென்னையில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.



வலுவான நியூசிலாந்து

நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே (229 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா (183 ரன்கள்), டேரில் மிட்செல், டாம் லாதமும், பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், டிரென்ட் பவுல்ட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு 7 மாத இடைவெளிக்கு பிறகு முந்தைய ஆட்டத்தில் அணிக்கு திரும்பிய கேப்டன் வில்லியம்சன் (78 ரன்) பீல்டர் எறிந்த பந்து பட்டதில் இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அடுத்த 3 ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அவர் ஆடாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும். அவருக்கு பதிலாக வில் யங் களம் திரும்புகிறார். டாம் லாதம் அணியை வழிநடத்த உள்ளார்.

நியூசிலாந்து அணி தனது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் உள்ளது. இங்கு தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஆடுவதால் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி தங்களை மாற்றி கொண்டு செயல்படுவதில் நியூசிலாந்துக்கு அனுகூலமாக இருக்கும்.



ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளிக்குமா?

ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோல்வி கண்டது. முந்தைய ஆட்டத்தில் திடீரென எழுச்சி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ரமனுல்லா குர்பாஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இக்ரம் அலிகில் ஆகியோர் அரைசதம் அடித்து ஆப்கானிஸ்தான் சவாலான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான், ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தங்களது சுழல் ஜாலத்தால் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை நிலைகுலைய வைத்ததுடன் அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

இங்கிலாந்தை முதல்முறையாக சாய்த்த உற்சாகத்துடன் களம் இறங்கும் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட எல்லா வகையிலும் போராடும். சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணிக்கு, ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பை தொடரில் 2 முறை மோதி இருக்கின்றன. அதில் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்று இருக்கிறது.

நடப்பு தொடரில் சென்னையில் நடந்துள்ள 2 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி கண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.

கேப்டன்கள் கருத்து

போட்டி குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷகிடி நேற்று அளித்த பேட்டியில், 'கடந்த ஆட்டத்தில் நாங்கள் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக பெற்றது மிகப்பெரிய வெற்றியாகும். இது எங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்தது. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக நாங்கள் இந்தியாவில் அதிக அளவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவே இங்குள்ள ஆடுகளத்தின் தன்மை நன்கு தெரியும். இந்திய ஆடுகளங்களின் சூழ்நிலை ஆப்கானிஸ்தானை போன்றதாகும். எனவே இங்கு ஆடுவது எங்களுக்கு எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும்' என்றார்.

நியூசிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் டாம் லாதம் கூறுகையில், 'இந்த போட்டிக்காக நாங்கள் எல்லாவகையிலும் நன்றாக தயாராகி இருக்கிறோம். நாங்கள் வியூகங்களை களத்தில் சரியாக செயல்படுத்தினால் எங்களை தோற்கடிப்பது கடினமாகும்' என்றார்.

பிற்பகல் 2 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

நியூசிலாந்து: டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, வில் யங், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம் (கேப்டன்), மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story