வெற்றிக்கணக்கை தொடங்குமா ஆஸ்திரேலியா..? - இலங்கையுடன் இன்று மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிக் கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது.
லக்னோ,
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 14-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் இரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. இரு ஆட்டங்களிலும் அந்த அணியின் ஸ்கோர் 200-ஐ கூட தொடவில்லை. எஞ்சிய 7 லீக்கிலும் வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேற முடியும். இனி ஒவ்வொரு ஆட்டமும் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா-சாவா போன்றது தான்.
லக்னோவில் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவிடம் மோதி இருப்பதால் அந்த அனுபவம் ஆஸ்திரேலியாவுக்கு அனுகூலமாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது. எனவே பேட்டிங், பவுலிங், பீல்டிங் மூன்றிலும் அசத்தினால் தான் சரிவில் இருந்து மீள முடியும், மிட்செல் மார்ஷ், வார்னர், சுமித், லபுஸ்சேன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அணியை தூக்கி நிறுத்த வேண்டிய தருணம் இதுவாகும். இல்லாவிட்டால் உலகக் கோப்பையில் முதல்முறையாக முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த மோசமான வரலாற்றை சந்திக்க நேரிடும்.
கம்மின்ஸ் பேட்டி
ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், '2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் லீக்கில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோற்றோம். இவ்விரு அணிகளும் சமீபத்தில் எங்களுக்கு எதிராக குடைச்சல் கொடுத்தனர். இப்போது வேறு அணிகளை சந்திக்கப்போகிறோம். அந்த அணிக்கு எதிராக நாங்கள் ஏற்கனவே சாதித்து இருப்பதால் நம்பிக்கையுடன் இறங்குவோம். ஒவ்வொரு ஆட்டத்தையும் ஏறக்குறைய இறுதிப்போட்டி போன்று பாவித்து விளையாடுவோம்' என்றார்.
இதே நிலைமையில் தான் இலங்கையும் தவிக்கிறது. இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 428 ரன்களை விட்டுக்கொடுத்து தோற்றது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 344 ரன்கள் குவித்தும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை அணியில் பேட்டிங் நன்றாக உள்ளது. ஆனால் பவுலர்கள் தான் சொதப்புகிறார்கள். இரு ஆட்டத்தையும் சேர்த்து 773 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். பதிரானா, வெல்லாலகேவின் பந்துவீச்சு எடுபடவில்லை. பவுலர்கள் முந்தைய தவறுக்கு பரிகாரம் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
கேப்டன் தசுன் ஷனகா தொடையில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக குசல் மென்டிஸ் அணியை வழிநடத்துவார்.
27 ஆண்டு சோகம்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 102 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 63-ல் ஆஸ்திரேலியாவும், 35-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. 4 ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்தித்த 10 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 8 ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1996-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் மட்டும் தோற்கடித்து இருந்தது. உலகக் கோப்பையில் 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாமல் போராடும் இலங்கை அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிற்பகல் 2 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ் (கேப்டன்), சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதுஷன்கா.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.