தோல்வியில் இருந்து மீளுமா பெங்களூரு? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்


தோல்வியில்  இருந்து மீளுமா பெங்களூரு? ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
x

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்திக்கிறது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்திக்கிறது.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அதன் பிறகு 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும், 28 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடமும் அடுத்தடுத்து தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து வருகிறது.

ஐதராபாத் கணிக்க முடியாத ஒரு அணியாக விளங்குகிறது. தனது தொடக்க ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்த அந்த அணி அடுத்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதன் பிறகு 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும் வீழ்த்தியது.

சரிவில் இருந்து மீண்டு வர பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தங்கள் அதிரடியை தொடர ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12 ஆட்டத்தில் ஐதராபாத்தும், 10 ஆட்டத்தில் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், விஜய் குமார் வைஷாக், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லே, முகமது சிராஜ்.

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க் ரம், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், நடராஜன்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story