என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்: மேக்ஸ்வெல்
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 4-வது சீசனில் ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் விளையாட உள்ளார்.
சிட்னி,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 4-வது சீசனில் ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் விளையாட உள்ளார்.
இந்நிலையில் என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி ஐபிஎல் தொடரில்தான் நடைபெறும் என்று கூறும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியது பின்வருமாறு'-
"என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவேன். ஏனெனில் என்னுடைய கேரியர் முழுவதும் ஐபிஎல் நிறைய நல்ல மாற்றங்களை கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன். அதில் நான் சந்தித்த நபர்களும், பயிற்சியாளர்களும், சர்வதேச வீரர்களும் என்னுடைய கேரியரில் சிறந்து விளங்குவதற்கு எப்படி உதவினார்கள் என்பதை திரும்பிப் பார்க்கிறேன்.
குறிப்பாக 2 மாதங்கள் நீங்கள் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற மகத்தான வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பையும் அவர்களுடன் சேர்ந்து மற்ற போட்டிகளைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பையும் பெறுகிறீர்கள். எந்த வீரர்களிடம் நீங்கள் கேட்டாலும் இது நல்ல அனுபவமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனவே வரும் காலங்களில் இன்னும் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளில் எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்" என்று கூறினார்.