இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறுமா..? - ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்


இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறுமா..? - ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்
x

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேற கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப்1-ல் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் குரூப்2-ல் இருந்து அரைஇறுதிக்குள் நுழையும் இரண்டு அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் இறுதி கட்ட 3 லீக் ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தியா-ஜிம்பாப்வே மோதல்

இதில் மெல்போர்னில் நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வேயை (குரூப்2) சந்திக்கிறது.

3 வெற்றி (பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்) 6 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரைஇறுதியை எட்ட முடியும். அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலும் இந்திய அணியின் அரைஇறுதி முன்னேற்றத்துக்கு பிரச்சினை எதுவும் இருக்காது. ஆனால் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் விராட்கோலி, சூர்யகுமார், கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது ஷமியும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா மற்ற ஆட்டங்களில் சோபிக்கவில்லை. அவர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். தனது பிரிவில் முதலிடத்தில் நீடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும் ஆவலுடன் இந்திய அணி இருக்கிறது. அதேநேரத்தில் ஏற்கனவே மெல்போர்ன் ஆடுகளத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய அனுபவம் இந்திய அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

மழை மிரட்டல்

ஜிம்பாப்வே அணி ஒரு வெற்றி (பாகிஸ்தானுக்கு எதிராக), 2 தோல்வி (வங்காளதேசம், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்), ஒரு முடிவில்லையுடன் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்) 3 புள்ளி எடுத்து அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. ஜிம்பாப்வே அணியின் பேட்டிங்கில் சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மாதேவிரும், பந்து வீச்சில் முஜரபானி, ரிச்சர்ட் கராவா ஆகியோரும் வலுசேர்க்கிறார். ஆல்-ரவுண்டராக சிகந்தர் ராசா அசத்தி வருகிறார். பாகிஸ்தானை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜிம்பாப்வே தனது கடைசி ஆட்டத்திலும் அச்சமின்றி செயல்பட்டு அசத்த முயற்சிக்கும்.

இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

20 ஓவர் சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் இந்தியாவும், 2-ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்று இருக்கின்றன. 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

பிற்பகல் 1.30 மணிக்கு...

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

ஜிம்பாப்வே: வெஸ்லி மாதேவிர், கிரேக் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா, சீன் வில்லியம்ஸ், சிகந்தர் ராசா, மில்டன் ஷூம்பா, ரையான் பர்ல், லுக் ஜாங்வி, ரிச்சர்ட் கராவா, சதரா, முஜரபானி,

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story