வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெற்றி; இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு கேப்டன் தவான் பாராட்டு


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெற்றி; இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு கேப்டன் தவான் பாராட்டு
x

இந்திய அணியில் சில வீரர்களுக்கு வயது குறைவாக இருந்தாலும், அவர்கள் முதிர்ச்சியுடன் விளையாடியதாக ஷிகர் தவான் தெரிவித்தார்.

மேட்ரிட்,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய இந்தியா 36 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்த போது மறுபடியும் மழை பெய்தது. இதனால் அத்துடன் இந்தியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது.

பின்னர் மழை நின்றதும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறைப்படி 35 ஓவர்களில் 257 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டது.

இதன் மூலம் இந்தியா 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், 'அணியில் சில வீரர்களுக்கு வயது குறைவு தான். ஆனால் அவர்கள் முதிர்ச்சியுடன் விளையாடினர். இதே போல் நெருக்கடியை திறம்பட சமாளித்த விதமும் அருமை. அவர்களை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த தொடரில் நானும், சுப்மான் கில்லும் இரண்டு ஆட்டங்களில் 100 ரன்னுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். இது நல்ல அறிகுறியாகும். தற்போதைய எனது பேட்டிங்கும், எனது ஷாட்டுகளும் மிகவும் திருப்தி அளிக்கிறது. பந்து வீச்சாளர்களையும் பாராட்டியாக வேண்டும். அவர்கள் தங்களது 100 சதவீத முயற்சியை வழங்கியுள்ளனர். முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் உள்ளிட்ட அனைவரின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது' என்றார்.


Next Story