பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்


பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து இந்திய அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதிக்கும் தகுதி பெற்றது.

சில்ஹெட்,

8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் நேற்று பகலில் நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை சந்தித்தது. காயம் காரணமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹேமலதா, ராதா யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஷபாலி வர்மா, நவ்ஜிரி, சினே ராணா சேர்க்கப்பட்டனர். கேப்டன் பொறுப்பை ஸ்மிர்தி மந்தனா கவனித்தார்.

ஷபாலி வர்மா அரைசதம்

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். ஸ்கோர் 96 ரன்னாக (12 ஓவரில்) உயர்ந்த போது ஸ்மிர்தி மந்தனா 47 ரன்னில் (38 பந்து, 6 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். 4-வது அரைதம் விளாசிய ஷபாலி வர்மா 55 ரன்னில் (44 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ருமனா அகமது பந்து வீச்சில் போல்டு ஆனார். ஷபாலி வர்மா 20 ரன்னை எட்டிய போது சர்வதேச 20 ஓவர் போட்டியில் 1,000 ரன்களை கடந்தார். அவர் 43 ஆட்டங்களில் ஆடி 1,036 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 18 வயதான ஷபாலி வர்மா இளம் வயதில் 20 ஓவர் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

அடுத்து வந்த ரிச்சா கோஷ் (4 ரன்), நவ்ஜிரி (0), தீப்தி ஷர்மா (10 ரன்) நிலைக்கவில்லை. 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களுடன் (24 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ருமனா அகமது 3 விக்கெட் சாய்த்தார்.

இந்தியா அரைஇறுதிக்கு தகுதி

பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியினர், இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். வங்காளதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் நிகார் சுல்தானா 36 ரன்னும், பார்கானா ஹக் 30 ரன்னும், முர்ஷிதா காதுன் 21 ரன்னும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா தலா 2 விக்கெட்டும், ரேணுகா சிங், சினே ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். அரைசதம் அடித்ததுடன் 2 விக்கெட்டும் சாய்த்து ஆல்-ரவுண்டராக அசத்திய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

5-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன் (8 புள்ளிகள்) அரைஇறுதிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை தாய்லாந்தை எதிர்கொள்கிறது.

இலங்கை அபாரம்

முன்னதாக காலையில் நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஒஷாதி ரணசிங்கே ஆட்டம் இழக்காமல் 23 ரன்னும், கேப்டன் சமாரி அட்டப்பட்டு, நிலாக்‌ஷி டி சில்வா தலா 21 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய மலேசியா அணி 9.5 ஓவர்களில் 33 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது. எல்சா ஹுன்டெர் (18 ரன்) தவிர யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இலங்கை தரப்பில் மால்ஷா ஷிஹானி 4 விக்கெட்டும், சுகந்திகா குமாரி, இனோகா ரனவீரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் மால்ஷா ஷிஹானி (இலங்கை) ஆட்டநாயகி விருதை கைப்பற்றினார்.

இன்றைய ஆட்டங்களில் மலேசியா-தாய்லாந்து (காலை 8.30 மணி) பாகிஸ்தான்-ஐக்கிய அரபு அமீரகம் (பகல் 1 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story