மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது தாய்லாந்து அணி

Image Courtesy: Cricket Thailand
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தாய்லாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளது.
சில்கெட்,
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
அரைஇறுதியை நெருங்கிய இந்த தொடரில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளனர். இந்நிலையில் அரைஇறுதிக்கு முன்னேறும் 4 வது அணி எது என்பதில் தொடரை நடத்தும் வங்காளதேசம், தாய்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இதில் வங்காள்தேச அணிக்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது.
அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திப்பதாக இருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே வங்காளதேச அணி அரைஇறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக ஒரு பந்து கூட போடாமல் கைவிடப்பட்டது. இதனால் வெற்றிக்கான 2 புள்ளி இரு அணிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
இதனால் வங்காளதேச அணி லீக் சுற்றின் முடிவில் 6 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டம் கைவிடப்பட்டதால் தாய்லாந்து அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதாவது 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் வங்காளதேசத்தை விட முன்னிலையில் இருந்த தாய்லாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
இத்தொடரில் கடைசி ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. ஆனால் இந்த ஆட்டம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. தாய்லாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.






