பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூருவை வீழ்த்தி டெல்லி வெற்றி


பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூருவை வீழ்த்தி டெல்லி வெற்றி
x

image courtesy; twitter/@wplt20

தினத்தந்தி 1 March 2024 3:28 AM GMT (Updated: 1 March 2024 3:29 AM GMT)

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் மோதின.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 7-வது லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் மந்தனா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த டெல்லி அணியில் கேப்டன் மெக்லானிங் (11 ரன்) ஏமாற்றினாலும், ஷபாலி வர்மாவும், அலிஸ் கேப்சியும் பெங்களூருவின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் வேட்டை நடத்தினர். ஷபாலி அரைசதம் (50 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். அலிஸ் கேப்சி 46 ரன்கள் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

இதைத் தொடர்ந்து மரிஜானே காப்பும் (32 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெஸ் ஜோனசெனும் (36 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் மழை பொழிந்து ஸ்கோர் 190-ஐ தாண்ட வைத்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியில் கேப்டன் மந்தனாவும், சோபி டேவினும் முதல் விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்து அருமையான அடித்தளம் அமைத்தனர். டேவின் 23 ரன்னில் வெளியேறினார். பெண்கள் பிரீமியர் லீக்கில் முதல் முறையாக அரைசதம் அடித்த மந்தனா 74 ரன்னில் (43 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டு ஆனார்.

இவர்களுக்கு பிறகு பெங்களூரு அணியில் மேகனா (36 ரன்), ரிச்சா கோஷ் (19 ரன்) தவிர வேறு யாரும் பின்வரிசையில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பெங்களூரு அணியால் 9 விக்கெட்டுக்கு 169 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை சுவைத்தது. டெல்லி தரப்பில் ஜெஸ் ஜோனசென் 3 விக்கெட்டும், அருந்ததி ரெட்டி, மரிஜானே காப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 3-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.


Next Story