உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பா...?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
தர்மசாலா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைப்பெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.
இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் போது மதியம் 1 மணிக்கு 47 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மதியம் 2 மணிக்கு 51 சதவீதமும், மதியம் 3 மணிக்கு 47 சதவீதமும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் மழை படிப்படியாக குறைந்து மாலை 4 மற்றும் 5 மணிக்கு 14 சதவீதமும், மாலை 6 மணிக்கு 10 சதவீதமும், அதன் பின்னர் இரவு 11 மணி வரை 2 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டம் பெரிய அளவில் மழையால் பாதிக்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.