உலகக்கோப்பை கிரிக்கெட்: சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்..!!


உலகக்கோப்பை கிரிக்கெட்: சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்..!!
x

image courtesy; ICC

50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் இணை இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. முடிவில் 41.2 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் இஷான் கிஷனை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவுட் ஆக்கினார். இது அவரது 50-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.

இவர் தனது 19-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் மலிங்கா 25 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்து ஸ்டார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story