உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று; ராசா அதிரடி சதம்...நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே 2வது வெற்றி...!
ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 54 பந்தில் 102 ரன்கள் குவித்தார்.
ஹராரே,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் விக்ரம்ஜித் சிங் 88 ரன், மேக்ஸ் ஓ'டவுட் 59 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வெஸ்லி பாரேசி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 873 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை 315 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி 40 ரன்னும், கிரேக் எர்வின் 50 ரன்னும், அடுத்து களம் இறங்கிய வெஸ்லி மாதேவேரே 10 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து களம் இறங்கிய சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா நிதானமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்ஸ் 91 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சிக்கந்தர் ராசா சதம் அடித்து அசத்தினார்.அவர் 54 பந்தில் 102 ரன்கள் அடித்தார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி தொடர்ச்சியாக பெற்ற 2வது வெற்றி இதுவாகும்.