உலகக்கோப்பை கிரிக்கெட்; ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடி சதத்தால் இந்திய அணி 410 ரன்கள் குவிப்பு!


உலகக்கோப்பை கிரிக்கெட்; ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடி சதத்தால் இந்திய அணி 410 ரன்கள் குவிப்பு!
x

image courtesy; twitter/@BCCI

தினத்தந்தி 12 Nov 2023 12:23 PM GMT (Updated: 12 Nov 2023 12:31 PM GMT)

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்கள் குவித்தார்.

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் கில் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் கை கோர்த்த கோலி மற்றும் ஐயர் சிறுது நேரம் நிலைத்து விளையாடினர். இதில் அரைசதம் அடித்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ஐயர் அதிரடியாகிய விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அதன்பின் ராகுலும் அதன்பின் ராகுலும் 62 பந்துகளில் தனது சதத்தை சிக்சருடன் நிறைவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். சதம் அடித்த நிலையில் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

நெதர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களம் இறங்க உள்ளது.


Next Story