உலகக்கோப்பை கிரிக்கெட்; முதல் வெற்றியை பதிவு செய்யுமா இலங்கை...நெதர்லாந்துடன் நாளை மோதல்...!
உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.
லக்னோ,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி நெதர்லாந்தை லக்னோவில் சந்திக்கிறது. இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத இலங்கை அணி நாளை நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.
அதேவேளையில் தங்களது கடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து இந்த முறை இலங்கைக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்பில் உள்ளது. அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.