முதல் இன்னிங்சில் இப்படி விளையாடினால் வெற்றி பெற முடியாது - இங்கிலாந்தை விளாசிய குக்


முதல் இன்னிங்சில் இப்படி விளையாடினால் வெற்றி பெற முடியாது - இங்கிலாந்தை விளாசிய குக்
x

இங்கிலாந்து 3-வது நாள் உணவு இடைவெளிக்குள் 400 - 450 ரன்கள் அடித்து இந்தியாவை முந்தி முன்னிலை பெறும் என்று குக் தெரிவித்திருந்தார்.

ராஜ்கோட்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாளில் 196/2 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் 2-வது நாளில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து 3-வது நாள் உணவு இடைவெளிக்குள் 400 - 450 ரன்கள் அடித்து இந்தியாவை முந்தி முன்னிலை பெறும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்திருந்தார். ஆனால் 3-வது நாளில் அஸ்வின் இல்லாமலேயே 224/2 என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்தை அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து சுருட்டியது இந்தியா.

இந்நிலையில் 800 ரன்கள் அடிப்பீர்கள் என்று நம்பி சொன்ன தன்னுடைய கருத்துகளை பொய்யாக்கிய இங்கிலாந்து அணியை அலெஸ்டர் குக் தற்போது கடுமையாக விமர்சித்துள்ளது பின்வருமாறு;- "நாளை இங்கிலாந்து 800 ரன்கள் அடிப்பார்கள் என்று நான் நேற்று சொன்னேன். தற்போது நான் அதிலிருந்து 481 ரன்களை மட்டுமே குறைவாக சொல்லியுள்ளேன் என தெரிகிறது. இப்போது வெல்வதற்கு வாய்ப்புள்ளதா? இங்கிலாந்து பேட்டிங்கில் மோசமாக விளையாடியது.

முதல் இன்னிங்சில் இப்படி விளையாடினால் உங்களால் வெற்றி பெற முடியாது. டெஸ்ட் போட்டிகளில் வெல்வதற்கு நீங்கள் நீண்ட நேரம் அசத்த வேண்டும். நேற்று சுமாராக விளையாடிய இந்தியா இன்று சிறப்பாக செயல்பட்டது. பும்ராவுக்கு எதிராக ஜோ ரூட் அப்படி ஒரு ஷாட்டை விளையாடலாமா என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். உலகின் சிறந்த பவுலரான பும்ராவுக்கு எதிராக தொடர்ந்து தடுமாறுவது தெரிந்தும் ரூட் அப்படி ஒரு ஷாட்டை விளையாடினார்" என்று கூறினார்.


Next Story