அர்ஜென்டினா-பனாமா நட்புறவு கால்பந்து போட்டி: 800-வது கோல் அடித்தார் மெஸ்சி


அர்ஜென்டினா-பனாமா நட்புறவு கால்பந்து போட்டி: 800-வது கோல் அடித்தார் மெஸ்சி
x

Image Courtesy : AFP

ரொனால்டோவுக்கு அடுத்து 800-வது கோல் மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை 35 வயதான மெஸ்சி பெற்றார்.

பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா- பனாமா அணிகள் இடையே நட்புறவு கால்பந்து போட்டி பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த அர்ஜென்டினா அதன் பிறகு விளையாடிய முதல் சர்வதேச போட்டி இது தான். உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியில் 78-வது நிமிடத்தில் தியாகோ அல்மாடாவும், 89-வது நிமிடத்தில் கேப்டன் லயோனல் மெஸ்சியும் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினர்.

இதில் மெஸ்சி 'பிரிகிக்' வாய்ப்பில் உதைத்த பந்து அரண்போல் வரிசையாக நின்ற வீரர்களை தாண்டி வலைக்குள் புகுந்த போது, குழுமியிருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மெஸ்சிக்கு ஒட்டுமொத்தத்தில் இது 800-வது கோலாகும். அர்ஜென்டினா அணிக்காக 99 கோலும், கிளப் அணிக்காக 701 கோலும் போட்டுள்ளார். சர்வதேச கால்பந்து சங்கத்தின் சாதனை மற்றும் புள்ளி விவரங்களின்படி போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை 35 வயதான மெஸ்சி பெற்றார்.

பிரேசில் ஜாம்பவான் பீலே ஆயிரத்துக்கு மேல் கோல் அடித்திருந்தாலும் அவற்றில் நிறைய கோல்கள் அங்கீகாரம் பெறாத ஆட்டங்கள் மூலம் வந்தவை என்ற கூறி சர்வதேச கால்பந்து கால்பந்து சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story