இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது: முன்னாள் வீரர்


இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது: முன்னாள் வீரர்
x

கோப்புப்படம் 

இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக சஸ்பெண்டு செய்வது என பிபா கவுன்சில் ஒருமித்த முடிவு எடுத்துள்ளது. இந்த தலையீடானது, பிபா அமைப்பின் விதிகளை மீறிய தீவிர செயல் என கருதப்படுகிறது என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், வருகிற அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை 2022 கால்பந்து போட்டிகள், திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தப்பட இயலாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டி தொடர் நடத்துவதற்கான அடுத்த வழிமுறைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள பிபா அமைப்பு, எப்போது தேவைப்படுமோ அப்போது, அதுபற்றி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும் என்றும் பிபா தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "இந்திய கால்பந்து கூட்டமைப்பை பிபா சஸ்பெண்ட் செய்தது மிகக் கடுமையான நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இருந்தாலும் நமது நாட்டின் கால்பந்து நிர்வாக சிஸ்டத்தை சீர்படுத்த இதனை ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன். இந்திய கால்பந்தின் சிறப்புக்காக கூட்டமைப்பின் நிர்வாகிகள், மாநில சங்கங்கள் என எல்லோரும் ஓர் அணியில் இணைந்து செயல்படுவது அவசியம்" என்று பாய்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.


Next Story