பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனை


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனை
x

Image Courtesy : AFP

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.

கான்பெர்ரா,

32 அணிகள் பங்கேற்கும் 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற ஜூலை 20-ந் தேதி முதல் ஆகஸ்டு 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. போட்டி தொடங்க இன்னும் 40 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் இந்த பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.

இதுவரை 10 லட்சத்து 3 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இது கடந்த 2019-ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

இது குறித்து சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த ஆண்டு நடத்தும் 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை 10 லட்சத்தை தாண்டி விட்டது என்பதை எல்லோருடனும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். இது கடந்த (2019-ம் ஆண்டு) உலகக் கோப்பை போட்டியின் போது விற்பனையான டிக்கெட் எண்ணிக்கையை விட அதிகமாகும். அதிக ரசிகர்கள் பார்த்த பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியாக இது சாதனை படைக்க இருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story