இந்திய ஆக்கி அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்: கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

இந்திய ஆக்கி அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய ஆக்கி அணியின் மூத்த கோல்கீப்பரான ஸ்ரீஜேஷ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், 

‘ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கு பிறகும் அடுத்த 4 ஆண்டுகள் குறித்து நாங்கள் திட்டமிடுகிறோம். எனவே டோக்கியோ போட்டிக்கு பிறகு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான திட்டமிடுதலை ஏற்கனவே தொடங்கி விட்டோம். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் நிறைய மாற்றங்கள் நடக்க உள்ளன. இதற்காக தயார்படுத்தும் பிரதான அணிக்கான பட்டியலில் நிறைய புதிய வீரர்கள் இருப்பார்கள். அதாவது இளம் வீரர்களை நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கான அணியில் சேர்ப்போம் என்று சொல்லவில்லை. 

இந்த ஆண்டில் முதலில் புரோ லீக் போட்டி வருகிறது. அடுத்து காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதனால் அணியில் இடம் பெறும் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். பெரும்பாலும் ஆசிய கோப்பை போட்டி இளம் வீரர்களின் திறமையை சோதித்து வாய்ப்பு அளிக்க நல்ல அடித்தளமாக இருக்கும். ஏதாவது ஒரு கட்டத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து தான் ஆக வேண்டும். 

இந்த ஆண்டு அவர்களுக்கு நன்றாக இருக்கும். ஏனெனில் மூத்த வீரர்களுடன் இணைந்து விளையாடி அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தற்போது நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் கவனம் செலுத்தி வருகிறோம். ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எங்களது முதல் இலக்காகும்’ என்று தெரிவித்தார்.


Next Story