அகில இந்திய ஆக்கி: தமிழக அணி தோல்வி


அகில இந்திய ஆக்கி: தமிழக அணி தோல்வி
x

எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டித்தொடரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மத்திய தணிக்கை துறை அலுவலக அணி 6-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணியை தோற்கடித்தது. தணிக்கை துறை அணியில் வீரதமிழன் 2 கோலும், அப்ஹரன் சுதேவ், மனிஷ் யாதவ், பர்விந்தர் சிங், ஜெய்பிரகாஷ் பட்டேல் தலா ஒரு கோலும் அடித்தனர். பஞ்சாப் நேஷனல் வங்கி தரப்பில் பகத்சிங் தில்லான் 2 கோல் திருப்பினார்.

கர்நாடகா - இந்திய ரெயில்வே அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரெயில்வே அணியில் பிரதாப் லக்ரா 5-வது நிமிடத்திலும், கர்நாடகா அணியில் சுனில் 33-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

இன்னொரு ஆட்டத்தில் இந்திய விமானப்படை 4-3 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. விமானப்படை அணியில் மனிப் கெர்கெட்டா ஹாட்ரிக் கோல் (16-வது, 35-வது, 43-வது நிமிடம்) அடித்தார். தமிழ்நாடு தரப்பில் ஆனந்த் (29-வது நிமிடம்), மாரீஸ்வரன் (35-வது நிமிடம்), அரவிந்த் 48-வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர்.

இன்றைய லீக் ஆட்டங்களில் கர்நாடகா - மத்திய தலைமைச் செயலகம் (பிற்பகல் 2.30 மணி), பஞ்சாப் நேஷனல் வங்கி - இந்திய ராணுவம் (மாலை 4.15 மணி), இந்திய கடற்படை - இந்தியன் ஆயில் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story