ஆசிய கோப்பை ஆக்கி: சூப்பர் 4 சுற்றில் 2-1 என ஜப்பானை வீழ்த்தியது இந்தியா


ஆசிய கோப்பை ஆக்கி: சூப்பர் 4 சுற்றில் 2-1 என ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
x

image tweeted by @ india_all sports

ஆசிய கோப்பை ஆக்கியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

ஜகார்த்தா,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர்4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின.

இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணிக்கு மஞ்சீத் 8 ஆவது நிமிடத்திலும், பவன் ராஜ்பர் 35 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஜப்பானுக்கு தகுமா நிவா 18 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை கிடைத்த பெனால்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்றத்தவறினர். இதனால் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது.

மற்றொரு சூப்பர் 4 ஆட்டத்தில் தென் கொரியா மற்றும் மலேசியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையுடன் முடிந்தது. இந்தியா தனது அடுத்த சூப்பர் 4 ஆட்டத்தில் மலேசியாவை நாளை எதிர்கொள்கிறது.


Next Story