சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி தொடங்கியது..! முதல் போட்டியில் ஜப்பான் - தென் கொரியா அணிகள் மோதல்


சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி தொடங்கியது..! முதல் போட்டியில் ஜப்பான் - தென் கொரியா அணிகள் மோதல்
x
தினத்தந்தி 3 Aug 2023 11:53 AM GMT (Updated: 3 Aug 2023 12:01 PM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் (செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8) இன்னும் 50 நாட்களில் அரங்கேற இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடக்க நாளான இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடிவருகின்றன. இந்த இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்க போட்டி கோலாகலமாக தொடங்கியது.

இதனையடுத்து மாலை 6.15 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரவு 8.30 மணிக்கு தொடங்கும் 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 25-வது இடத்தில் இருக்கும் சீனாவை எதிர்கொள்கிறது.


Next Story