'என் தந்தையின் கனவை நனவாக்கிய பிறகு நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறேன்' இந்திய ஆக்கி வீராங்கனை வைஷ்ணவி பால்கே


என் தந்தையின் கனவை நனவாக்கிய பிறகு நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறேன் இந்திய ஆக்கி வீராங்கனை வைஷ்ணவி பால்கே
x

image courtesy; twitter/@TheHockeyIndia

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியில் வைஷ்ணவி பால்கே இடம்பெற்றுள்ளார்.

பெங்களூரு,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதில் இந்திய பெண்கள் ஆக்கி அணியில் மராட்டிய மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்த வைஷ்ணவி பால்கே இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அணியில் இடம்பெற்றது குறித்து வைஷ்ணவி கூறுகையில்,

'எனது தந்தை இளமையாக இருந்தபோது மல்யுத்த வீரராக இருந்தார், ஆனால் அவரால் பெரிய அளவில் வர முடியவில்லை. அதனால் அவர் என்னை விளையாட்டுகளில் ஈடுபடுத்தினார். நான் நாட்டுக்காக விளையாடுவேன் என்று நம்பினார். பல வகையான விளையாட்டுகளில் நான் ஆக்கி விளையாட்டை தேர்வு செய்தேன். எனது தந்தை எப்போதும் என்னை ஊக்குவிப்பார். எனது முதல் சர்வதேச சுற்றுப்பயணத்திற்குச் சென்றபோது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது.

நான் 19-வது ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தேன் என்பதை அறிந்ததும், அவரது மகிழ்ச்சி பல மடங்கு அதிகரித்தது. சீனியர் அணியில் இது எனது முதல் பெரிய போட்டியாகும். மேலும் என் தந்தையின் கனவை நனவாக்கிய பிறகு நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறேன். இது ஒரு பெரிய தளம், ஆடுகளத்தில் எனது திறமைகளை வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்' என தனது உணர்வுகளை விவரித்தார்.

மேலும், பதக்கத்துடன் திரும்பி வருவதே குறிக்கோள். நாங்கள் இன்னும் அதிகமாக முயற்சி செய்திருக்கலாம் என்று நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை. பயிற்சி ஆட்டங்களின் போது நான் எப்படிச் செயல்படுகிறேனோ அதே போல் செயல்பட விரும்புகிறேன். இது ஒரு பெரிய போட்டி. அதனால் கொஞ்சம் அழுத்தம் இருக்கும். ஆனால் நான் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சுதந்திரமாக விளையாடுவேன், பதக்கத்துடன் திரும்பி வருவேன் என கூறியுள்ளார்.


Next Story