ஆசிய கோப்பை போட்டி: இந்தோனேசியா சென்றது இந்திய ஆக்கி அணி


ஆசிய கோப்பை போட்டி: இந்தோனேசியா சென்றது இந்திய ஆக்கி அணி
x

Image: @thehockeyindia/Twitter

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று விமானம் மூலம் இந்தோனேசியா சென்றது.

பெங்களூரு,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 24-ந் தேதி ஜப்பானையும், 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 26-ந் தேதி இந்தோனேசியாவையும் சந்திக்கிறது. இந்த போட்டிக்கான பிரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய ஆக்கி அணி பெங்களூருவில் இருந்து நேற்று விமானம் மூலம் இந்தோனேசியா புறப்பட்டு சென்றது.

முன்னதாக இந்திய ஆக்கி அணியின் கேப்டன் பிரேந்திர லக்ரா அளித்த பேட்டியில், 'ஆசிய கோப்பை போட்டி மதிப்புமிக்கதாகும். இந்த போட்டிக்கான நமது அணியினர் நன்கு தயாராகி இருப்பதுடன் உற்சாகமான மனநிலையில் உள்ளனர். பெங்களூருவில் நடந்த எங்களது பயிற்சி முகாம் கடினமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்த விரும்புகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் நிச்சயம் பதற்றம் இருக்க தான் செய்யும். நாங்கள் எங்களுடைய சொந்த ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம்' என்றார்.


Next Story