ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா


ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா
x
தினத்தந்தி 2 Dec 2023 8:45 PM GMT (Updated: 2 Dec 2023 8:45 PM GMT)

இந்திய அணி 2 தோல்வியுடன் 3-வது இடமும், கனடா 3 தோல்வியுடன் கடைசி இடமும் பெற்று கால்இறுதி வாய்ப்பை இழந்தன.

சான்டியாகோ,

10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும்.

இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதியது. விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனைகள் ஸ்குருஸ் நோவ் 5-வது நிமிடத்திலும், டிமோட் பிரேன்ஸ் 42-வது நிமிடத்திலும் கோலடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையை உருவாக்கினர். இந்திய வீராங்கனை அன்னு 47-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பிலும், 51-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பிலும் கோலடித்து 2-2 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தினர். 52-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீராங்கனை பொனாமி அஸ்ட்ரிட் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை கோலாக்கினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. முடிவில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி கால்இறுதிக்கு முன்னேறியது.

இதேபிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி 8-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் தனது பிரிவில் 2-வது இடம் பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடமும், கனடா 3 தோல்வியுடன் கடைசி இடமும் பெற்று கால்இறுதி வாய்ப்பை இழந்தன.


Next Story