ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா - ஸ்பெயின் அணிகள் இன்று மோதல்


ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா - ஸ்பெயின் அணிகள் இன்று மோதல்
x

image courtesy: Dilip Kumar Tirkey twitter

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கோலாலம்பூர்,

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. வருகிற 16-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான இந்தியா, 'நம்பர் ஒன்' அணியான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, 6 முறை சாம்பியனான ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன.

அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். கடந்த ஆண்டு 4-வது இடத்தை பெற்ற இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஸ்பெயின், கனடா தென்கொரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி இன்று நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதுகிறது. கடந்த ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தில் ஜொலித்த இந்திய அணி தடுப்பு யுக்தியில் கோட்டை விட்டது. 6 பெனால்டி கார்னர் வாய்ப்பை விட்டுக்கொடுத்த இந்திய அணி அதில் 2 கோலும் வாங்கியது.

எனவே வலுவான ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story