'ஆசிய கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்று'- ஆக்கி வீராங்கனை சங்கீதா குமாரி


ஆசிய கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்று- ஆக்கி வீராங்கனை சங்கீதா குமாரி
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 9 Nov 2023 6:09 AM GMT (Updated: 9 Nov 2023 6:10 AM GMT)

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ராஞ்சி,

பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. இந்த ஆட்டத்தில் சங்கீதா குமாரி 17-வது நிமிடத்திலும், நேகா 46-வது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 57-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 60-நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

தொடர்ந்து 6 ஆட்டங்களில் வென்று தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட இந்தியா, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கையில் ஏந்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோல் அடித்த இந்திய வீராங்கனை சங்கீதா குமாரி வெற்றிக்கு பின் கூறுகையில், 'இது எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்றாகும். என்னை நம்பியதற்காக அணியின் ஊழியர்கள், எனது சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் அவர்களின் நம்பிக்கையை என்னால் காப்பாற்ற முடிந்ததில் பெருமைப்படுகிறேன். இறுதிப்போட்டியில், முன்கூட்டியே முன்னிலை பெறுவது எப்போதுமே முக்கியம். அதனை அணிக்காக வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் அணியின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடிந்தது. இனி வரும் காலங்களிலும் இதேவகையில் தொடருவேன் என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார்.

சங்கீதா குமாரி, இந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக கோல் அடித்த வீராங்கனை என்ற சிறப்பையும், தொடரின் வளர்ந்து வரும் நட்சத்திர வீராங்கனை விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story