புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா


புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா
x

கோப்புப்படம் 

7-வது லீக்கில் ஆடிய இந்தியா 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 17 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ரூர்கேலா,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இதில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, உலக சாம்பியன் ஜெர்மனியை சந்தித்தது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்தியா 6-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இந்த தொடரில் இந்தியா, ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளிப்பது இது 2-வது முறையாகும். கடந்த வாரம் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது.

இந்திய அணி தரப்பில் ஜக்ராஜ் சிங் 21-வது நிமிடத்திலும், அபிஷேக் 22-வது மற்றும் 51-வது நிமிடத்திலும், தமிழகத்தை சேர்ந்த கார்த்தி 24-வது மற்றும் 46-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 26-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

7-வது லீக்கில் ஆடிய இந்தியா 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 17 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.


Next Story