புரோ ஆக்கி லீக் தொடர்: அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி


புரோ ஆக்கி லீக் தொடர்: அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
x

Image Courtesy : @jarmanpreet04 twitter

அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தோவான்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நெதர்லாந்தில் உள்ள இந்தோவான் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 8-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை சந்தித்தது.

தொடக்கம் முதலே அர்ஜென்டினா அணி ஆக்ரோஷமாக தாக்குதல் பாணியை தொடுத்து நெருக்கடி அளித்தது. அதற்கு இந்திய அணியின் முன்கள வீரர்களான கார்த்தி செல்வம், அபிஷேக், சுக்ஜீத் சிங் ஆகியோர் பதிலடி கொடுக்கும் வகையில் பந்துடன் எதிரணி கோல் எல்லையை அவ்வப்போது முற்றுகையிட்டு குடைச்சல் கொடுத்தனர். இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

33-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கச்சிதமாக கோல் போட்டார். இந்த சீசனில் அவர் அடித்த 18-வது கோல் இதுவாகும். 39-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் மற்றொரு இந்திய வீரர் அமித் ரோஹிதாஸ் கோல் வலைக்குள் பந்தை திணித்தார்.

59-வது நிமிடத்தில் இந்திய அணி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தியது. விவேக் சாகர் பிரசாத் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் அபிஷேக் கோலாக மாற்றினார். பதில் கோல் திருப்ப அர்ஜென்டினா அணியினர் கடைசி வரை கடுமையாக மல்லுக்கட்டினாலும் பலன் எதுவும் கிட்டவில்லை. இந்திய அணியின் கோல் கீப்பர்கள் ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பதாக் ஆகியோர் அர்ஜென்டினா அணியினரின் சில கோல் அடிக்கும் முயற்சிகளை அபாரமாக தடுத்து நிறுத்தினர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 14-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 10 வெற்றி, 4 தோல்வி என 27 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணி 26 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 13-வது ஆட்டத்தில் ஆடிய அர்ஜென்டினா அணி கண்ட 9-வது தோல்வி இதுவாகும்.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. நம்பர் ஒன் அணியான நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story