உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியம் அணிக்கு மீண்டும் மகுடம் கிட்டுமா? - ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை


உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியம் அணிக்கு மீண்டும் மகுடம் கிட்டுமா? - ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை
x

கோப்புப்படம்

உலகக் கோப்பை ஆக்கியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புவனேஸ்வர்,

16 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணி, முன்னாள் சாம்பியனான ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் லீக் சுற்றில் ஒரே பிரிவில் (பி) இடம் பிடித்து இருந்தன. இரு அணிகளும் தங்களது லீக் ஆட்டங்களில் ஜப்பான், தென்கொரியாவை வென்றன. பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா 7 புள்ளிகள் பெற்றாலும் கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் முன்னிலை பெற்று தனது பிரிவில் முதலிடத்தை பிடித்த பெல்ஜியம் அணி நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கால் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அரைஇறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும் விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்ற ஜெர்மனி கோல் விகிதாச்சரத்தில் பெல்ஜியத்தை விட பின்தங்கி தனது பிரிவில் இரண்டாவது இடம் பெற்றதால் 2-வது சுற்றில் ஆடி 5-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியின் தாக்குதல் மற்றும் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் பெனால்டி கார்னரை கோலாக்குவதிலும் கச்சிதமாக செயல்படுகிறது. அந்த அணியின் கோல் கீப்பர் வின்சென்ட் வானஸ்சின் தடுப்பு அரணை தகர்ப்பது எளிதான காரியம் இல்லை. அந்த அணி இதுவரை 18 கோல்கள் அடித்து இருக்கிறது. அதில் டாம் பூன் 7 கோல்கள் அடித்து நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். அனுபவம் வாய்ந்த வீரர்களை அதிகம் கொண்ட பெல்ஜியம் அணி மகுடம் சூடினால் உலகக் கோப்பையை தொடர்ந்து 2 முறை வென்ற 4-வது அணி என்ற பெருமையை தனதாக்கும். ஏற்கனவே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகள் இந்த சாதனையை படைத்து இருக்கின்றன.

தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி அணியை எளிதில் கணிக்க முடியாது. அந்த அணி பீனிக்ஸ் பறவை போல் சரிவில் இருந்து மீண்டு வரும் சக்தி கொண்டதாகும். அந்த அணி கால்இறுதி மற்றும் அரைஇறுதி ஆட்டங்களில் முதல் பாதி முடிவில் 0-2 என்ற கணக்கில் இருந்து பின்தங்கி இருந்து கடைசி வரை நம்பிக்கையுடன் போராடி வெற்றியை தன்வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் பெல்ஜியமும், 13-ல் ஜெர்மனியும் வென்று இருக்கின்றன. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் (மாலை 4.30 மணி) சந்திக்கின்றன.

இறுதிப்போட்டி குறித்து பெல்ஜியம் அணியின் கேப்டன் பெலிக்ஸ் டினேயர் கூறுகையில், 'ஜெர்மனி மிகவும் சவாலான அணியாகும். கடைசி வரை எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். அவர்களது ஆட்டத்தை ஆராய்ந்து எங்களது திட்டத்தை செயல்படுத்துவோம்' என்றார்.

ஜெர்மனி அணியின் கேப்டன் மேக்ஸ் கிராம்பஸ்க் கருத்து தெரிவிக்கையில், 'எங்களது திறன் மற்றும் மனஉறுதி மீது நாங்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியமானதாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் பந்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது நம்பமுடியாத வகையில் இருந்தது. அதனை நாங்கள் தொடர விரும்புகிறோம். நாங்கள் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம்' என்றார்.


Next Story