ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது.
ஹாங்சோவ்,
துப்பாக்கி சுடுதலில் அபாரம்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி தொடரில் 7-வது நாளான நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்தியா கலக்கியது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) அணிகள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசலே, அகில் ஷெரான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1769 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. சீனா (1763 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா (1748 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தனிநபர் பிரிவின் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசலே முறையே முதல் 2 இடங்களை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினர். ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 2 வீரர்கள் தான் பதக்க சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் 5-வது இடம் பிடித்த இந்திய வீரர் அகில் ஷெரான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறினார். இறுதிப்போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் 459.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். சீன வீரர் லின்ஷூ (460.6 புள்ளி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஸ்வப்னில் குசலே (438.9 புள்ளி) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இளம் வீராங்கனைக்கு தங்கம்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் 17 வயது இந்திய வீராங்கனை பாலக் குலியா (242.1 புள்ளி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். மற்றொரு இந்திய வீராங்கனையான 18 வயது இஷா சிங் (239.7 புள்ளி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் அணிகள் பிரிவில் இஷா சிங், பாலக் குலியா, திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1731 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது. சீனா (1736 புள்ளி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும், சீன தைபே (1723 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றன.
துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை அள்ளியுள்ளது. இது ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு 14 பதக்கங்கள் வென்றதே (3 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம்) அதிகபட்சமாக இருந்தது.
தமிழக வீரருக்கு வெள்ளி
டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் ராம்குமார் -சகெத் மைனெனி இணை 4-6, 4-6 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் ஜாசன் ஜூங்-ஹூ யூ ஹியோ ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. சென்னையை சேர்ந்த ராம்குமார் ஆசிய போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா போசெல் கூட்டணி 6-1, 3-6, (10-4) என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சான் ஹாவ் சிங்-யூ ஹிசோ இணையை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஸ்குவாஷ்- குத்துச்சண்டை
ஸ்குவாஷ் பெண்கள் அணிகள் பிரிவின் அரைஇறுதியில் இந்தியா 1-2 என்ற கணக்கில் ஹாங்காங்கிடம் தோற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றது. இந்திய அணியில் ஜோஸ்னா சின்னப்பா தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். மற்ற வீராங்கனைகளான அனாஹத் சிங், தன்வி கண்ணா தோல்வி கண்டனர். இதன் ஆண்கள் அணிகள் பிரிவின் அரைஇறுதியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன், ஜோர்டான் வீராங்கனை நாசர் ஹனனை சந்தித்தார். நிகாத் ஜரீனின் சரமாரியான குத்துகளை சமாளிக்க முடியாமல் ஹனன் திணறியதை அடுத்து போட்டியை பாதியில் நிறுத்திய நடுவர் நிகாத் ஜரீன் அரைஇறுதிக்கு முன்னேறியதாக அறிவித்தார். இதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்த நிகாத் ஜரீன் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதிப்படுத்தினார்.
தடகளத்தில் பதக்கம்
தடகள போட்டியில் 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்த நிலையில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை கிரண் பாலியான் (17.36 மீட்டர்) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். 24 வயதான கிரண் பாலியான் ஆசிய விளையாட்டு குண்டு எறிதலில் 72 ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் போக்குவரத்து தலைமை காவலரின் மகள் ஆவார்.
டேபிள் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-7, 6-11, 12-10, 11-13, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுதாசினியை சாய்த்து கால்இறுதியை எட்டினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்கள் சரத் கமல், சத்யன் ஆகியோர் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.
பேட்மிண்டனில் ஆண்கள் அணிகள் பிரிவின் கால்இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்ததுடன் பதக்கத்தையும் உறுதி செய்தது. இந்திய அணியில் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டனர். கடந்த 37 ஆண்டுகளில் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா பதக்கத்தை கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். இதன் பெண்கள் அணிகள் பிரிவின் கால்இறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் பணிந்தது.பி.வி.சிந்து, காயத்ரி கோபிசந்த், அஷ்மிதா சாலிஹா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தனர்.