வாலிபால் வெற்றிப் பெண்கள் - காயத்ரி, அக்‌ஷயா


வாலிபால் வெற்றிப் பெண்கள் - காயத்ரி, அக்‌ஷயா
x
தினத்தந்தி 4 Feb 2017 6:51 AM GMT (Updated: 4 Feb 2017 6:51 AM GMT)

வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் முத்திரை பதித்து வருகிறார்கள், சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவிகள்.

குறிப்பாக, இப்பள்ளியின் காயத்ரி தேசிய அளவில் ‘சிறந்த தற்காப்பு வீராங்கனை’ என்ற விருதையும், அக்‌ஷயா, ‘சிறந்த தாக்குதல் வீராங்கனை’ என்ற விருதையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களிடம் பேசினோம்...

காயத்ரி

“நான் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா வீரக்குமார், இருசக்கர வாகன விற்பனை பணியில் இருக்கிறார், அம்மா செவிலியராகப் பணிபுரிகிறார். அக்கா குஷ்மா, தங்கை கல்பனா.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சக மாணவிகளின் தூண்டுதலின்பேரில் வாலிபாலில் ஈடுபடத் தொடங்கினேன். ஏழாம் வகுப்பில் நான் எனது முதல் தொடரில் ஆடினேன். சென்னையில் 22 பள்ளிகள் பங்கேற்ற அப்போட்டியில் நாங்கள் சாம்பியன் ஆனோம்.

அதன்பின், எட்டாம் வகுப்பு முதல் தற்போது பதினோராம் வகுப்பு வரை மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும், வெற்றிபெற்றும் வந்திருக்கிறோம்.

எட்டாம் வகுப்பில் நான் எனது முதலாவது தேசியப் போட்டியில் ஆடினேன். சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையிலான போட்டியாகும் அது. மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அப்போட்டியில் எங்கள் பள்ளி அணி, உத்தரப்பிரதேச, மாராட்டிய பள்ளி அணிகளை வென்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டெல்லியிடம் தோற்றது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, இமாச்சலபிரதேசம் சிம்லாவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் நான்காமிடம் பெற்றோம்.

பத்தாம் வகுப்பில், நாங்கள் முதல்முறையாக தேசிய அளவில் வெற்றியை ருசித்தோம். ஒடிசா மாநிலம் பாரதீப்பில் நடைபெற்ற வித்யபாரதி தேசியப் போட்டியில், நாங்கள் இறுதியாட்டத்தில் மத்தியப்பிரதேசத்துடன் மோதினோம். அப்போட்டி கடினமாக இருந்தபோதிலும் நாங்கள் கடுமையாகப் போராடி நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினோம்.

அப்போட்டியில் வென்றதன் மூலம், தேசிய பள்ளி விளையாட்டுகள் சம்மேளனப் போட்டிக்குத் தேர்வானோம். அலகாபாத்தில் நடைபெற்ற அப்போட்டியில் நாங்கள் காலிறுதி வரை முன்னேறினோம்.

கடந்த ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்த வித்ய பாரதி தேசியப் போட்டியில் வெற்றியை ஈட்டினோம்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், சி.பி.எஸ்.இ. வாலிபால் தேசியப் போட்டியில் இறுதிக்கட்டத்தை எட்டினோம். வாரணாசியில் நடந்த அப்போட்டியில் நாங்கள் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிவந்தோம். ஆனால் இறுதி மோதலில் புனே அணியிடம் போராடித் தோற்றோம்.

அம்மாவுடன் காயத்ரி - விளையாட்டு வேகத்தில்...


பொதுவாக தேசிய அளவிலான போட்டிகளில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சிறந்த அணிகள் மட்டுமே வருவார்கள் என்பதால் சவால் கடுமையாக இருக்கும். அந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தயாராகித்தான் செல்கிறோம். ஆனாலும் எல்லா நேரங்களிலும் வெற்றியை வசப்படுத்த முடிவதில்லை.

தவிர, வாரணாசி போட்டியின்போது நான் கால் காயத்துடனே ஆடினேன். அதையும் மீறி சிறப்பாகச் செயல்பட்டதால் ‘பெஸ்ட் டிபென்டர்’ என்ற பட்டம் எனக்குக் கிடைத்தது தனிப்பட்ட ஆறுதல். இறுதிப்போட்டிக்குப் பின் அவ்விருதுக்கு எனது பெயரை அறிவித்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
நான் ஏற்கனவே பத்தாம் வகுப்பில், மாநில அளவிலான போட்டியில் ‘சிறந்த வீராங்கனை’ விருது பெற்றிருக்கிறேன்.

பி.எஸ்சி., முதலாமாண்டு பயிலும் அக்கா குஷ்மா, எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கை கல்பனா ஆகியோரும் தேசிய அளவிலான வீராங்கனைகள்தான்.
இப்படி சகோதரிகள் நாங்கள் அனைவரும் வாலிபால் விளையாடுவது உதவிகரமாகத்தான் உள்ளது. வீட்டில் நாங்கள் இதுபற்றி விவாதிப்போம். நேரம் கிடைத்தால், மொட்டை மாடியில்கூட மூவரும் வாலிபால் ஆடுவோம். நாங்கள் மட்டுமல்ல, எங்கம்மாவும் கூட அவர் காலத்தில் தடகள வீராங்கனையாக விளங்கியவர். உயரந்தாண்டுதல், நீளந்தாண்டுதலில் மாவட்ட அளவில் சாதித்தவர்.

எங்கம்மா ஒரு விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்தவர் என்பதால், எங்களின் தேவைகள் புரிந்து உதவி செய்து, நாங்கள் வாலிபாலில் சாதிப்பதற்கு உறுதுணையாக உள்ளார். எங்கப்பாவும் எங்களின் பலம்.

தமிழக அணிக்காக ஆட வேண்டும் என்பது எனது ஆசை. விடாமுயற்சி, கடும் உழைப்பினால் அதைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” துடிப்புடன் சொல்லி முடித்தார், காயத்ரி.

அக்‌ஷயா

“தற்போது 11-ம் வகுப்பு பயிலும் நான், ஆறாம் வகுப்பு முதல் வாலிபால் விளையாடி வருகிறேன். அப்பா முருகன் தலைமைக் காவலராக உள்ளார், அம்மா சுமித்ரா இல்லத்தரசி. தம்பி பிரதீப் ராஜும் வாலிபால் விளையாடி வருகிறான்.

பள்ளித் தாளாளர், முதல்வர், உடற்கல்வி ஆசிரியருடன் வீராங்கனைகள்


சுமித்ராவைப் போல என்னையும் சக தோழிகள்தான் வாலிபால் விளையாடத் தூண்டினர். ஏழாம் வகுப்பில் முதல்முறையாக தேசிய அளவிலான போட்டியில் ஆடினேன்.

நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தேசியப் போட்டியில் ‘பெஸ்ட் அட்டாக்கர்’ விருது பெற்றது எனக்குக் கிடைத்த கவுரவம். தாக்குதலில் எனக்கு எந்த அளவு ஆர்வம் உண்டோ, அதே அளவு தற்காப்பு நிலையிலும் ஆட விருப்பம்.

நான் 6 தேசியப் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றிருக்கிறேன். தேசியப் போட்டிகளில் விளையாடியதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

பொதுவாக மாநில அளவிலான போட்டிகளுக்கும் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் தரத்தில் பெரிதும் வித்தியாசம் இருக்கும். வடஇந்திய அணிகளுக்கு சரிக்குச் சமமாக விளையாடுவது சாதாரண விஷயம் அல்ல. அந்தவகையில் அவர்களுக்கு நாங்கள் சவால் கொடுக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி.

தமிழகத்தில் வாலிபாலில் முன்னணி அணிகளில் ஒன்றாக எங்கள் பள்ளி அணி திகழ்கிறது. அதற்கு எங்களின் அணி உணர்வும், பரஸ்பர ஒத்துழைப்பும்தான் காரணம். சீனியர்- ஜூனியர் என்ற பாகுபாடு எங்களுக்கு இடையில் இல்லை.
ஒரு தாக்குதல் வீராங்கனையாக அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்திருப்பதில் எனக்குத் திருப்தி. ஆந்திராவுக்கு எதிரான தேசியப் போட்டி ஒன்றில், நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது எனக்கு இன்றைக்கும் இருக்கும் வருத்தம். சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வென்றது சமீபத்திய பெருமை.

பொதுவாக, ‘ஸ்ட்ரோக்’ எனது பலம் என்றால், எம்பிக் குதிப்பது எனது பலவீனம். அதில் நான் என்னை மேம்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். அதற்காகவே ‘ஸ்கிப்பிங்’கில் ஈடுபட்டு வருகிறேன்.

வாலிபால் தவிர பேட்மிண்டனிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் அது பொழுதுபோக்குக்குத்தான். எனது கவனம், இலக்கு எல்லாமே வாலிபாலில்தான் இருக்கிறது.

என்னை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என்பது எங்கப்பாவின் ஆசை. எனக்குள்ளும் அந்த எண்ணம் உறைந்திருந்தாலும், இப்போதைக்கு வாலிபாலில் தீவிரமாக இருக்கிறேன். இதில் மேலும் மேலும் உயரங்களை எட்ட வேண்டும் என்பது எனது ஆசை” என்று கண்களில் கனவுகள் மின்னக் கூறி முடித்தார், அக்‌ஷயா.

இந்த இருவரும், இவர்களது சக வீராங்கனைகளும், தங்களது சாதனைக்குப் பின்னால் தமது குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன், பள்ளியின் கவுரவத் தாளாளர் ராமச்சந்திரன், முதல்வர் சேதுபாய் ஆகியோரின் உதவியும், உடற்கல்வி ஆசிரியர் சின்னையனின் உழைப்பும் இருக்கிறது என்று கோரஸ் குரலில் கூறினர்.

இவர்களின் வேகத்தைப் பார்க்கையில், மேலும் பல வெற்றிகள் வந்து குவியும் என்பது புரிகிறது!

Next Story