புரோ கபடி லீக்: நிதின் தோமர் ரூ.93 லட்சத்திற்கு ஏலம்


புரோ கபடி லீக்:  நிதின் தோமர் ரூ.93 லட்சத்திற்கு ஏலம்
x
தினத்தந்தி 23 May 2017 10:15 PM GMT (Updated: 23 May 2017 7:56 PM GMT)

புரோ கபடி லீக் போட்டிக்கான ஏலத்தில் இளம் புயல் நிதின் தோமரை ரூ.93 லட்சத்திற்கு உத்தரபிரதேச அணி எடுத்தது.

புதுடெல்லி,

5–வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) தொடங்குகிறது. இந்த ஆண்டில் முதல் முறையாக 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தமிழக அணியும் அடங்கும். தமிழக அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 12 நகரங்களில் மொத்தம் 130 ஆட்டங்கள் நடக்க உள்ளன. போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

இதையொட்டி வீரர்களின் ஏலம் டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில் யாரும் எதிர்பாராத வகையில் உத்தரபிரதேச சேர்ந்த நிதின் தோமர் மெகா தொகைக்கு ஏலம் போனார். இவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும். அவரை இழுக்க பாட்னா, ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ், உத்தரபிரதேசம், குஜராத் அணிகள் மல்லுகட்டின. முடிவில் ரூ.93 லட்சத்திற்கு அவரை உத்தரபிதேச அணி வாங்கியது. புரோ கபடி லீக் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் இவர் தான்.

நிதின் தோமர் மகிழ்ச்சி

கடந்த ஆண்டு உலக கோப்பை கபடி போட்டியில் வாகை சூடிய இந்திய அணியில் இடம் பெற்றவரான 22 வயதான நிதின் தோமர் கூறுகையில், ‘இது கனவு போன்று உள்ளது. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு தொகையை முதலீடு செய்திருக்கும் உத்தரபிதேச அணிக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். எனது சகோதரி திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. அதற்கு இந்த பணத்தை செலவிடுவேன்’ என்றார்.

அவருக்கு அடுத்தபடியாக ரோகித்குமாரை ரூ.81 லட்சத்திற்கு பெங்களூரு புல்ஸ் அணியும், மன்ஜீத் சிலாரை ரூ.75½ லட்சத்திற்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், அமித் ஹூடாவை ரூ.63 லட்சத்திற்கு தமிழக அணியும் வாங்கியது. சேலத்தை சேர்ந்த கே.செல்வமணியை ரூ.73 லட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணி எடுத்தது.

2–வது நாளில் அதிகபட்சம் யார்?

இரண்டாவது நாளான நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக சுராஜ் தேசாய் ரூ.52.2 லட்சத்திற்கும் (டெல்லி அணி), ஜெய்தீப்சிங் ரூ.50 லட்சத்திற்கும் (ஜெய்ப்பூர்அணி) விலை போனார்கள். சி.அருண் (ரூ.12.4 லட்சம்), சோம்பிர் (ரூ.12 லட்சம்), விஜின் தங்கதுரை (ரூ.10.2 லட்சம்), முருது (ரூ.8 லட்சம்) உள்ளிட்டோர் தமிழக அணிக்கு வாங்கப்பட்டனர்.


Next Story