உலக தடகள போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி


உலக தடகள போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 11 Aug 2017 10:15 PM GMT (Updated: 11 Aug 2017 7:24 PM GMT)

உலக தடகள போட்டிக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

லண்டன்,

16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ பந்தயத்தில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் 17.68 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக்கொண்டார். அத்துடன் உலக தடகள ‘டிரிபிள்ஜம்ப்’ பந்தயத்தில் 3 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

200 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் துருக்கி வீரர் ரமில் குலியேவ் 20.09 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 400 மீட்டர் ஓட்டத்தின் சாம்பியனான தென்ஆப்பிரிக்காவின் வான் நீகெர்க், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டு வீரர் ஜெரீன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் 20.11 வினாடியில் இலக்கை கடந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றனர். தொற்று நோய் காரணமாக 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட போட்ஸ்வானா வீரர் ஐசக் மக்வாலா இதில் கலந்து கொண்டார். ஆனால் அவரால் 6-வது இடமே பிடிக்க முடிந்தது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் மொத்தம் 32 பேர் பங்கேற்றனர். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு களம் கன்டனர். இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருந்த உலக ஜூனியர் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 82.26 மீட்டர் தூரம் வீசி தனது பிரிவில் 7-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அளித்தார். ‘பி’ பிரிவில் இடம் பெற்று இருந்த மற்றொரு இந்திய வீரரான தேவிந்தர்சிங் 84.22 மீட்டர் தூரம் எறிந்து தனது பிரிவில் 5-வது இடம் பிடித்ததுடன் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றார். இறுதிசுற்றை எட்டிய 13 வீரர்களில் அவர் 7-வது இடத்தை பெற்றார். முதல் 5 இடங்கள் பிடித்தவர்கள் 85 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி வீசியது குறிப்பிடத்தக்கது.

உலக தடகளத்தில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பஞ்சாப்பை சேர்ந்த 26 வயதான தேவிந்தர்சிங் படைத்துள்ளார். நடப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியரும் இவர் தான். பதக்கத்தை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு நடக்கிறது. 

Next Story