மேவெதர்- மெக்கிரிகோர் மோதும் மெகா குத்துச்சண்டை போட்டி


மேவெதர்- மெக்கிரிகோர் மோதும் மெகா குத்துச்சண்டை போட்டி
x
தினத்தந்தி 25 Aug 2017 10:00 PM GMT (Updated: 25 Aug 2017 7:09 PM GMT)

மெகா குத்துச்சண்டை போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடக்க உள்ளது.

லாஸ் வேகாஸ்,

தொழில்முறை குத்துச்சண்டை ஜாம்பவான்கள் அமெரிக்காவின் புளோயிட் மேவெதர், கனோர் மெக்கிரிகோர் (அயர்லாந்து) இடையே மெகா குத்துச்சண்டை போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடக்க உள்ளது. இது 12 சுற்று கொண்ட போட்டியாகும்.

தொழில்முறை குத்துச்சண்டையில் தோல்வியே சந்திக்காதவர் 40 வயதான மேவெதர். 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீண்டும் குத்துச்சண்டை களத்திற்கு திரும்பியிருக்கிறார். தான் பங்கேற்ற 49 போட்டிகளிலும் வாகை சூடியிருக்கும் மேவெதர் அதில் 26 பேரை நாக்-அவுட் செய்திருப்பதும் அடங்கும். யு.எப்.சி. லைட்வெயிட் சாம்பியனான 29 வயதான மெக்கிரிகோர் இதுவரை 24 போட்டியில் விளையாடி 21-ல் வெற்றி கண்டு இருக்கிறார். சரமாரியாக குத்துகள் விடுவதில் வல்லவர்களான இருவரும் களத்தில் பயங்கரமாக மோதிக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

டிக்கெட் கட்டணம், சர்வதேச மற்றும் அமெரிக்க டி.வி. ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஷிப், சூதாட்ட கிளப், அமெரிக்க தியேட்டர்களில் ஒளிபரப்பு, போட்டி தொடர்பான பொருட்கள் விற்பனை இப்படி இந்த போட்டியின் மூலம் ரூ.4,230 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.32 ஆயிரத்தில் இருந்து ரூ.6½ லட்சம் வரை விற்கப்படுகிறது.

மேவெதர் கூறும் போது, ‘குத்துச்சண்டை வரலாற்றில் மிகப்பெரிய போட்டி இதுவாகும். முக்கியமான இந்த மோதலை கண்டுகளிக்க வேண்டும் என்றால் அதிக தொகையை கொடுக்கத்தான் வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இந்த பந்தயம் அமெரிக்க நேரப்படி இன்று இரவு நடக்கிறது. இந்திய நேரப்படி மறுநாள் காலை (அதாவது ஞாயிற்றுக்கிழமை) 9.30 மணிக்கு பார்க்க முடியும்.

Next Story