பெயர் குழப்பத்தால் அணியில் இருந்து நீக்கம்: மல்யுத்த வீரருக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு


பெயர் குழப்பத்தால் அணியில் இருந்து நீக்கம்: மல்யுத்த வீரருக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Sep 2017 9:12 PM GMT (Updated: 3 Sep 2017 9:12 PM GMT)

2006–ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்ல்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

புதுடெல்லி,

2006–ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்ல்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார். பஞ்சாபை சேர்ந்த இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். முன்னதாக 2002–ம் ஆண்டில் தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணியில் இடம் பிடித்து இருந்த சதீஷ்குமார் கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மல்யுத்த வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதை தவறாக புரிந்து கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனம் அவருக்கு பதிலாக பஞ்சாபை சேர்ந்த சதீஷ்குமாரை அணியில் இருந்து தவறுதலாக நீக்கியது பின்னர் தெரியவந்தது. இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளின் தவறான முடிவால் சர்வதேச போட்டி வாய்ப்பு பறிபோனதால் வேதனை அடைந்த சதீஷ்குமார் டெல்லி செசன்சு கோர்ட்டில் 2002–ம் ஆண்டில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுரிந்தர் ரதி நேற்று தீர்ப்பளித்தார். இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளின் அஜாக்கிரதையை வண்மையாக கண்டித்த நீதிபதி பாதிக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் நஷ்டஈடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story