100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
லிமா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடக்கிறது.
2024–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை பெற பாரீஸ் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஆகிய நகரங்கள் இடையே நேரடி போட்டி நிலவியது. முதலில் விருப்பம் தெரிவித்த ஹம்பர்க், ரோம், புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் பிறகு விலகிக் கொண்டன.
இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேலும் 4 ஆண்டுகள் காத்திருந்து 2028–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ்ஏஞ்சல்ஸ் ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில் பெரு தலைநகர் லிமாவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தில் 2024–ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை பாரீசுக்கும், 2028–ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வழங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
பாரீஸ் நகரில் 1900, 1924–ம் ஆண்டுகளில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி நடந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மீண்டும் ஒலிம்பிக் நடக்க இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்சில் இதற்கு முன்பு 1932, 1984–ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் நடந்துள்ளது.