‘மல்யுத்தமே எனது வழிபாடு!’ –சாக்ஷி மாலிக்


‘மல்யுத்தமே எனது வழிபாடு!’ –சாக்ஷி மாலிக்
x
தினத்தந்தி 23 Sep 2017 9:34 AM GMT (Updated: 23 Sep 2017 9:34 AM GMT)

சாதனையாளர்கள் ஓர் உச்ச வெற்றியுடன் திருப்தி அடைந்துவிடுவதில்லை என்பதற்கு சாக்ஷியே சான்று.

“எனக்கு எல்லாமே மல்யுத்தம்தான். மல்யுத்தமே எனது வழிபாடு!’’ என்கிறார், இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.

‘‘ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை ஆன நான், ஒலிம்பிக்கில்  இரண்டு பதக்கங்கள்  வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாகவும் ஆசைப்படுகிறேன்’’ என்கிறார். 

மல்யுத்தமே உயிர்மூச்சு

‘‘எனது உயிர்மூச்சே மல்யுத்தம்தான். நான் இன்றிருக்கும் நிலைக்குக் காரணம் மல்யுத்தமே. அதுவே, வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் கிடையாது என்று எனக்குக் கற்பித்தது’’ –சாக்ஷியின் குரலிலேயே அவர் மல்யுத்தத்தின் மீது கொண்டிருக்கும் நேசம் புரிகிறது.

பயிற்சி, முயற்சிதான் சாக்ஷியின் வெற்றி ரகசியம் என்பது அவரது வார்த்தைகளில் தெரிகிறது...

‘‘நான் ஒருபோதும் பயிற்சியைத் தவறவிடுவதே இல்லை. நான் மேலும் மேலும் என்னை மேம்படுத்திக்கொள்ளவே முயல்கிறேன். காரணம், முன்னேற நினைக்கும் யாராலும், கற்பதை நிறுத்திவிட முடியாது.’’

மாறிய மனோபாவம்

கடந்த ரியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 58 கிலோ பிரிவில் தான் வென்ற வெண்கலம், தனது தன்னம்பிக்கையைக் கூட்டியிருப்பது மட்டுமின்றி, மக்களின் மனோபாவத்தையும் மாற்றியிருப்பதாகக் கூறுகிறார், சாக்ஷி.

‘‘நிச்சயமாக நல்ல மாற்றம் வந்திருக்கிறது. நான் மல்யுத்தத்தில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் இருந்து ஒப்பிடும்போது தற்போது சூழல் ரொம்பவே மாறியிருக்கிறது. தற்போது பெண்கள், குறிப்பாக அரியானா மாநிலத்தில், அவர்  களது பெற்றோராலேயே மல்யுத்தத்தில் ஈடுபடும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். தங்கள் பெண்கள் மல்யுத்தத்தில் ஈடுபட்டுச் சாதிக்க வேண்டும் என்று விரும்புவதாக என்னிடமே பல பெற்றோர் கூறுகின்றனர். ஆக, ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. ஆனால் சில பெண்கள் என்னிடம் வந்து, தங்களை மல்யுத்தத்தில் ஈடுபட அனுமதிக்கும்படி அவர்களது பெற்றோரிடம் பேசுமாறு கூறுகின்றனர். அவர்களின் பெற்றோரிடம், ‘எந்த விளையாட்டிலும் ஓர் ஆணைப் போல பெண்ணாலும் சாதிக்க முடியும்’ என்று கூறு கிறேன். அதை நான் நிரூபித்திருக்கிறேன், என்னைப் போல பல பெண்கள் நிரூபித்திருக்கிறார் கள்’’ –திடமாகச் சொல்கிறார், சாக்ஷி.

தாத்தாவைப் பார்த்து...

மல்யுத்தத்தை நோக்கித் தான் ஈர்க்கப்படுவதற்கு தனது தாத்தா பத்லு ராம்தான் காரணம் என்கிறார், சாக்ஷி.

‘‘எனது தாத்தா ஒரு மல்யுத்த வீரர். தனது மல்யுத்தக் கதைகளை பெருமிதமும் சந்தோ‌ஷமுமாக அவர் கூறுவார். அவர் சொல்வதைக் கேட்டுக் கேட்டுத்தான் எனக்கும் மல்யுத்தத்தில் ஆர்வம் பிறந்தது. நான் எனது 12 வயதிலேயே மல்யுத்தப் பயிற்சி பெறத் தொடங்கிவிட்டேன். அது நான் என் வாழ்வில் எடுத்த மிகச் சிறந்த முடிவு என்பேன். ஆனால் நான் பல தடைகளைத் தாண்டித்தான் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. இருந்தபோதும் நான் எப்போதும் என் மீது நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தேன். இன்று மல்யுத்தத்தில் எனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்தியிருப்பதில் மகிழ்ச்சி.’’

முதல் முக்கியமான வெற்றி 

சாக்ஷி தன் மல்யுத்த வாழ்வில் பெற்ற முதல் முக்கியமான வெற்றி எது?

‘‘2010–ம் ஆண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நான் வெண்கலப் பதக்கம் வென்றேன். அதற்குப் பின் நான் பல பெரிய வெற்றிகளைப் பெற்றுவிட்டேன் என்றாலும், முதல் முக்கியமான வெற்றிக்கு நம் மனதில் ஸ்பெ‌ஷலான இடம் இருக்கும்தானே?’’ –பழைய நினைவில் நெகிழ்கிறார், சாக்ஷி.

சறுக்கல் ஏன்?

‘இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்தப் போட்டியில் நீங்கள் வெள்ளிப் பதக்கமே வென்றது கொஞ்சம் ஏமாற்றம் அளித்ததே?’ என்று கேள்வியைத் தடம் மாற்றினால்... 

‘‘ஒலிம்பிக் போட்டிக்குப் பின் நான் பங்கேற்ற முதல் சர்வதேசப் போட்டி, ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப். எனவே ஒரு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. ஆனால் அதற்காக நாங்கள் ஆசிய போட்டிக்கு நூறு சதவீதம் தயாராகவில்லை என்று கூற முடியாது. தற்போது நான் மறுபடியும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறேன்’’ என்று சொல்லும் சாக்ஷி, ரியோ ஒலிம்பிக்கில் அபாரமாகச் செயல்பட்டதால், தான் ஆசியப் போட்டியிலும் அசத்துவேன் என்று எல்லோரும் எதிர்பார்த்ததாகக் கூறுகிறார்.

நெருக்கடியும் நானும்

‘‘எங்களைப் போன்ற முன்னணி வீராங்கனைகளுக்கு எதிர்பார்ப்பு என்ற நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. கடின உழைப்பின் மூலம்தான் அந்த நெருக்கடியை எதிர்கொள்ள முடியும். நான் கடினமாக உழைத்தால், தன்னம்பிக்கை தானாகவே பெருகும்’’ என்று சுயஅலசலாகக் கூறுகிறார்.

ஒரு பிரபல வீராங்கனை ஆகிவிட்டதால் சாக்ஷி நிறைய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருக்கிறது. அது அவரது கவனத்தை மல்யுத்தத்தில் இருந்து திசை திருப்புகிறதா?

‘‘பொது நிகழ்வுகள் ஒருவகையில் நமது கவனத்தை திசைமாற்றுபவைதான். ஆனால் எது எப்படியிருந்தாலும் பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். மல்யுத்தம் என்பது ஒரு கடினமான விளையாட்டு. அதன் பயிற்சியில் இருந்து நாம் விலகுகிறோம் என்றால், விளையாட்டில் இருந்தே விலகுகிறோம் என்று அர்த்தம். நான் பொது நிகழ்ச்சிகளை ஒதுக்கவில்லை, அதேநேரம் மல்யுத்தத்திலும் கவனமாக இருக்கிறேன். வாழ்வில் நான் முதல் முன்னுரிமை கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருப்பது மல்யுத்தத்துக்குத்தான்!’’ சாக்ஷி உறுதிபடத் தெரிவிக்கிறார். 

அடுத்த இலக்குகள் 

ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட்டில் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் காமன்வெல்த் போட்டி, இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி, தொடர்ந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் அடுத்ததாக சாக்ஷி தனது பார்வையைப் பதித்திருக்கிறார்.

‘‘மல்யுத்தத்தில் நான் எவற்றிலெல்லாம் என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் நானும், பயிற்சியாளர்களும் கவனம் செலுத்துகிறோம். மல்யுத்த அசைவுகள், நுட்பங் களில் நாங்கள் உழைத்து வருகிறோம்’’ என்று சாக்ஷி விளக்குகிறார்.

கடின உழைப்பு, ஒருபோதும் மனம் தளர்ந்து    விடாதிருப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றை மல்யுத்தம் தனக்குக் கற்றுக்கொடுத்திருப்பதாகக் கூறுகிறார் இவர். அந்தப் பாடங்கள்தான் தனக்கு ஒலிம்பிக்கிலும் பதக்கம் பெற்றுத் தந்தன என்கிறார். 

மாற்றம் காணும் விளையாட்டுத் துறை 

சரி, பொதுவாக இந்திய விளையாட்டுத் துறை தற்போது எப்படி இருக்கிறது என்று கேட்டால், 

‘‘உண்மையிலேயே ஒரு மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. விளையாட்டுத் துறையில் ஒரு சக்தியாக இந்தியா வளர வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அடுத்த ஒலிம்பிக்கை குறிவைத்துச் சில முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன, அவையெல்லாம் பலன் தரும் என்று நம்பலாம். மெதுவாக என்றாலும், மாற்றம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து, தம் விளையாட்டில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போது வெற்றி தானாக வரும். மற்றொரு முக்கியமான வி‌ஷயத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன். அது, போதைப்பொருளை யாரும் நாடக்கூடாது. வாழ்வை அழிக்கும் மோசமான வி‌ஷயம் அது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும்!’’

சாக்ஷி சொல்லும் வார்த்தைகள் சத்தியம் எனலாம்.

Next Story