புரோ கபடி லீக்: கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி


புரோ கபடி லீக்: கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி
x
தினத்தந்தி 24 Sep 2017 9:45 PM GMT (Updated: 24 Sep 2017 7:28 PM GMT)

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

புதுடெல்லி,

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

5-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 92-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்சை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை ஆல்-அவுட் ஆக்கியதுடன் முதல் பாதியில் 18-15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை கண்டது.

பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள், தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்ததுடன், 7 நிமிடங்கள் இருந்த போது 27-24 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையும் பெற்றனர். கடைசி நிமிடம் வரை முன்னிலை தொடர்ந்ததால், இந்த முறையும் தமிழ் தலைவாஸ் அணி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் வீழ்ந்து விடுமோ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

ஆட்ட நேரம் நிறைவடைய வெறும் 5 வினாடி மட்டுமே இருந்த போது, தமிழ் தலைவாஸ் ஒரு புள்ளி பின்தங்கி இருந்தது. இறுதியாக கேப்டன் அஜய் தாகூர் ரைடுக்கு சென்றார். பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார்.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளி கணக்கில் பெங்காலுக்கு அதிர்ச்சி அளித்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 3-வது வெற்றியாகும். 18-வது லீக்கில் விளையாடிய பெங்கால் அணிக்கு 5-வது தோல்வியாகும்.

Next Story
  • chat