புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடருகிறது


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடருகிறது
x
தினத்தந்தி 1 Oct 2017 9:30 PM GMT (Updated: 1 Oct 2017 7:52 PM GMT)

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் மும்பையிடமும் வீழ்ந்தது.

சென்னை,

5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடிய உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு அரங்கேறிய 105-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பையுடன் மல்லுகட்டியது. விறுவிறுப்பான இந்த மோதலில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்த வண்ணம் இருந்தன. முதல் பாதியில் மும்பை அணி 18-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினர் எழுச்சி பெற்றனர். 5 நிமிடங்கள் இருக்கும் போது 26-26 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழக்கம் போல் இறுதிகட்டத்தில் கோட்டை விட்டனர். தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர், கடைசி 3 நிமிடத்திற்குள் இரண்டு முறை ரைடுக்கு சென்று சூப்பர் டேக்கிள் (எதிரணியில் குறைவான வீரர்கள் இருக்கும் போது கடைபிடிக்கப்படும் யுக்தி) முறையில் எதிரணியிடம் சிக்கி இந்த வகையில் 4 புள்ளிகளை இழக்க வேண்டியதாகி விட்டது. இதனால் தமிழ் தலைவாஸ் மறுபடியும் சரிவை சந்தித்தது.

முடிவில் மும்பை அணி 33-30 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி 10-வது வெற்றியை பெற்றது. தமிழ் தலைவாசுக்கு இது 10-வது தோல்வியாகும். இதுவரை 16 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றியும், 2 டையும் கண்டு மொத்தம் 34 புள்ளிகளுடன் தனது பிரிவில் ( பிரிவு) 5-வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வியின் மூலம் தமிழ் தலைவாசின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிபோய் விட்டது. முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

Next Story