புரோ கபடி லீக் தலை நிமிருமா தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் இன்று மோதல்


புரோ கபடி லீக் தலை நிமிருமா தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Oct 2017 9:30 PM GMT (Updated: 2 Oct 2017 8:09 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை

5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, ராகுல் சவுத்ரி தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் (பி பிரிவு) அணியை எதிர்கொள்கிறது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 19 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 11 தோல்வி, 2 டையுடன் 43 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 16 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 10 தோல்வி, 2 டையுடன் 34 புள்ளிகள் எடுத்து 5-வது இடத்தில் இருக்கிறது.

தமிழ் தலைவாஸ் அணி சொந்த ஊரில் சொதப்பி வருகிறது. சென்னையில் நடந்த தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே புனே, ஜெய்ப்பூர், மும்பை அணிகளிடம் தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய இரண்டு லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி, தோல்வியை சந்தித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுப்பதுடன், உள்ளூர் ரசிகர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த தமிழ் தலைவாஸ் அணி தலை நிமிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

‘தோல்வியை சந்தித்தாலும் வீரர்களின் சக்தி இன்னும் குறையவில்லை. வீரர்கள் வெற்றி வேட்கையுடன் தான் உள்ளனர். ரசிகர்களுடன் ஆதரவும் நன்றாக இருக்கிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்று தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் 106-வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள தபாங் டெல்லி- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 10 வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 4 வெற்றியுடன் பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story