சென்னையில் நடந்த கடைசி லீக்கிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி


சென்னையில் நடந்த கடைசி லீக்கிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி
x
தினத்தந்தி 5 Oct 2017 8:45 PM GMT (Updated: 5 Oct 2017 7:43 PM GMT)

சென்னையில் நடந்த கடைசி லீக்கிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

சென்னை,

12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக்கில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு அரங்கேறிய 110-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்சுடன் (பி பிரிவு) மோதியது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துக்கு மத்தியில் களம் புகுந்த தமிழ் தலைவாஸ் மறுபடியும் சொதப்பியது. முதல் பாதியில் 10-19 என்ற கணக்கில் பின்தங்கிய தமிழ் தலைவாஸ் அணி 3 முறை ஆல்-அவுட் ஆனதுடன் கடைசி வரை சரிவில் இருந்து மீளவில்லை. ரைடு செல்வதில் கில்லாடியான தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் இந்த ஆட்டத்தில் அடிக்கடி எதிராளியிடம் சிக்கியது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 35-45 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணி, 19-வது லீக்கில் விளையாடி அதில் சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும். ரைடு வகையில் அதிகபட்சமாக ரோகித்குமார் 17 புள்ளிகளும் (பெங்களூரு), அஜய் தாகூர் (தலைவாஸ்) 15 புள்ளிகளும் சேகரித்தனர்.

இத்துடன் சென்னை சுற்று நிறைவடைந்ததால் ஆட்டம் முடிந்ததும் வீரர்கள் ரசிகர்களை நோக்கி கைகூப்பி வணங்கி விடைபெற்றனர். சென்னையில் 6 லீக் ஆட்டங்களில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி அனைத்து ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) மோதுகின்றன.

Next Story