சென்னை பல்கலைக்கழக தடகளம்: மாநில கல்லூரி வீரர் விஷ்ணு புதிய சாதனை லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா அணிகள் ‘சாம்பியன்’


சென்னை பல்கலைக்கழக தடகளம்: மாநில கல்லூரி வீரர் விஷ்ணு புதிய சாதனை  லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா அணிகள் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 26 Oct 2017 8:45 PM GMT (Updated: 26 Oct 2017 8:25 PM GMT)

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி துறை சார்பில் ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி துறை சார்பில் ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் மாநில கல்லூரி வீரர் பி.எஸ்.விஷ்ணு 7.69 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்ததுடன் புதிய போட்டி சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் சுரேந்தர் (லயோலா) 7.65 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. மினி மாரத்தான் பந்தயத்தில் துரைசங்கரும் (லயோலா), 110 மீட்டர் தடை ஓட்டத்தில் லோகேஸ்வரனும் (லயோலா), 200 மீட்டர் ஓட்டத்தில் சிவகுமாரும் (லயோலா), வட்டு எறிதலில் சந்தோசும் (லயோலா), 1500 மீட்டர் ஓட்டத்தில் பென்யமின் டேனியலும் (டி.ஜி.வைஷ்ணவா), உயரம் தாண்டுதலில் இஷா முகமதுவும் (டி.ஜி.வைஷ்ணவா) டெக்கத்லான் பந்தயத்தில் லோகேஷ்வரனும் (லயோலா) முதலிடம் பிடித்தனர்.

பெண்களுக்கான மினி மாரத்தான் பந்தயத்தில் ஆனந்தியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), 200 மீட்டர் ஓட்டத்தில் ஸ்ரீஜாவும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), நீளம் தாண்டுதலில் ஹர்ஷினியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), 1500 மீட்டர் ஓட்டத்தில் பிரியாவும் (சோகா இகேடா), ஹெப்டத்லான் பந்தயத்தில் கனிமொழியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா) முதலிடத்தை கைப்பற்றினார்கள். சிறந்த வீரராக விஷ்ணுவும் (மாநில கல்லூரி), சிறந்த வீராங்கனையாக கனிமொழியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா) தேர்வு செய்யப்பட்டனர். ஆண்கள் பிரிவில் லயோலா 13 தங்கம், 7 வெள்ளி, 1 வெண்கலப்பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் நன்றி தெரிவித்தார்.


Next Story