புரோ கபடி லீக்: பாட்னா ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா? குஜராத் அணியுடன் சென்னையில் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி லீக் போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரட்ஸ்–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை,
புரோ கபடி லீக் போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரட்ஸ்–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னையில் இன்று இறுதிப்போட்டி5–வது புரோ கபடி லீக் போட்டி தொடர் இந்தியாவில் ஜூலை 28–ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 12 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
3 மாத காலம் நடைபெற்ற கபடி திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பாட்னா அணி ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா?பாசெல் அட்ராஷாலி தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 22 லீக் ஆட்டங்களில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிராவுடன் பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் அணி 22 லீக் ஆட்டங்களில் 10 வெற்றி, 7 தோல்வி, 5 டிராவுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘பிளே–ஆப்’ சுற்றில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ் அணிகளை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 2 முறையும், பாட்னா அணி ஒரு முறையும் வெற்றி பெற்றன.
கடந்த 2 சீசனிலும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரட்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். அந்த அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் ரைடில் 350 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். மொனு கோட் ரைடிலும், ஜெய்தீப் கேட்ச் செய்வதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
விறுவிறுப்புஅறிமுக அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் வீரர் சச்சின் ரைடில் புள்ளிகள் குவித்து வருகிறார். கேப்டன் பாசெல் அட்ராஷாலி, அபோசர் மொகாஜெர், சுனில்குமார் ஆகியோர் தடுப்பு ஆட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். முதல் பட்டத்தை வெல்ல குஜாராத் அணி தீவிரம் காட்டும். இரு அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்று இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெல்விஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இறுதிப்போட்டி குறித்து பாட்னா அணியின் பயிற்சியாளர் ராம்மெகர் சிங் அளித்த பேட்டியில், ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். பர்தீப் நர்வால் நல்ல நிலையில் உள்ளார். அவர் தனது 50 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே எங்கள் அணி பட்டத்தை வென்று விடும். எங்கள் அணியினர் ரைடில் சிறப்பாக செயல்படுவதால் தடுப்பு ஆட்டக்காரர்கள் செய்யும் சிறிய தவறும் பெரிதாக தெரிகிறது’ என்று தெரிவித்தார். பாட்னா அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் கருத்து தெரிவிக்கையில், ‘எனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார்.
பர்தீப் நர்வாலை கட்டுப்படுத்துவோம்குஜராத் அணியின் பயிற்சியாளர் மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், ‘3–வது சீசனில் நான் கேப்டனாக இருந்து பாட்னா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தேன். தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக கோப்பையை வெல்ல ஆர்வமாக இருக்கிறேன். பர்தீப் நர்வாலின் பலம், பலவீனம் எனக்கு நன்கு தெரியும். அவரை கட்டுப்படுத்த எங்களிடம் திட்டம் உள்ளது. லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை 2 முறை வீழ்த்தி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
குஜராத் அணியின் கேப்டன் பாசெல் அட்ராஷாலி கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டில் பர்தீப் நர்வாலும், நானும் ஒரே அணியில் தான் விளையாடினோம். இதனால் அவரது ஆட்ட அணுகுமுறை எனக்கு தெரியும். அவரை எங்களால் கட்டுப்படுத்த முடியும். புரோ கபடி மூலம் ஈரானில் கபடி வெகுவாக பிரபலம் அடைந்து இருக்கிறது’ என்றார்.