உலக இளையோர் குத்துச்சண்டை: ஜோதி, சாக்ஷி உள்பட 5 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்


உலக இளையோர் குத்துச்சண்டை: ஜோதி, சாக்ஷி உள்பட 5 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
x
தினத்தந்தி 26 Nov 2017 9:00 PM GMT (Updated: 26 Nov 2017 8:13 PM GMT)

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது.

கவுகாத்தி,

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிசுற்று ஆட்டங்கள் நேற்று அரங்கேறின. 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி, ரஷியாவின் எகடெரினா மால்சனோவாவை எதிர் கொண்டார். இருவரும் மாறி மாறி குத்துகளைவிட ரசிகர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். ஜோதியின் சில சாதுர்யமான குத்துகள் அவருக்கு புள்ளிகளை பெற்றுத்தந்தன. நடுவர்களின் முடிவின்படி ஜோதி 5–0 என்ற புள்ளி கணக்கில் எகடெரினாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் அடுத்த ஆண்டு அர்ஜென்டினாவில் நடக்கும் இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றார். தனது பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், 1999–ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர் என்பதால் அவருக்கு இளையோர் ஒலிம்பிக் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இதே போல் நீது (48 கிலோ), சாக்ஷி (54 கிலோ), ஷாஷி சோப்ரா (57 கிலோ), அன்குஷிதா போரோ (64 கிலோ) ஆகிய இந்திய வீராங்கனைகளும் தங்களது இறுதி ஆட்டங்களில் எதிராளிகளை சாய்த்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். இதில் அன்குஷிதா, அசாமை சேர்ந்தவர். மற்ற 4 பேரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஏற்கனவே நேகா யாதவ் (81 கிலோவுக்கு மேல்), அனுபமா (81 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்று இருந்தனர். இந்த போட்டியில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இது தான். அன்குஷிதா தொடரின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

தங்கப்பதக்கம் வென்ற 5 பேருக்கும் தலா 2 லட்சம் வழங்குவதாக அறிவித்த இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய்சிங், ‘இது ஒரு வியப்புக்குரிய செயல்பாடு. அனேகமாக 2020–ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லக்கூடிய வீராங்கனைகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார்.


Next Story