‘ஒலிம்பிக் தோல்வியால் ஓய்வு பெற நினைத்தேன்’ உலக பளுதூக்குதல் சாம்பியன் மீராபாய் சானு பேட்டி

ஒலிம்பிக் போட்டியில் தோல்வி கண்டதால் ஓய்வு பெறலாமா? என்று நினைத்தேன் என்று உலக பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஒலிம்பிக் போட்டியில் தோல்வி கண்டதால் ஓய்வு பெறலாமா? என்று நினைத்தேன் என்று உலக பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்தார்.
சாதனை படைத்த மீராபாய் சானுஅமெரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு ‘ஸ்னாட்ச்’ முறையில் 85 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 109 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் கடந்த 22 ஆண்டுகளில் உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
டெல்லியில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் மீராபாய் சானு பேசுகையில் கூறியதாவது:–
ஒலிம்பிக் தோல்வியால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வர எனக்கு அதிக நேரம் பிடித்தது. விளையாட்டில் இருந்து விடைபெற்று விடாலாமா? என்று கூட நினைத்தேன். சமூக வலைதளங்களில் எனது பயிற்சியாளருக்கு எதிரான விமர்சனம் என்னை காயப்படுத்தியது. இதனை சரிப்படுத்துவது எப்படி என்று இரவு பகலாக யோசித்தேன். அதற்கு நான் இன்னும் சிறப்பாக செயல்படுவது ஒன்று தான் வழி என்று முடிவு செய்து களம் திரும்பினேன்.
ஒலிம்பிக்கில் அதிர்ஷ்டம் இல்லைஒலிம்பிக் போட்டியில் உண்மையிலேயே நான் மோசமாக தான் செயல்பட்டேன். இது குறித்து எனது பயிற்சியாளருடன் கலந்து ஆலோசித்து எனது பயிற்சி நுணுக்கத்தில் சில மாற்றங்களை செய்தேன். எனது மனோதத்துவ நிபுணரும் பெரிய பங்கு வகித்தார். மனோதத்துவ நிபுணரை மாதத்தில் 2 முறை சந்தித்து ஆலோசனை பெறுவது வழக்கம். ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வாரந்தோறும் மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையை கேட்டேன். அது எனக்கு உதவிகரமாக இருந்தது. வாரந்தோறும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தால் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் மாதத்தில் 2 முறை சோதனை மேற்கொண்டது. உலக போட்டிக்கு சென்ற போது 2 முறை என்னிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. ரியோ ஒலிம்பிக் போட்டியில் நான் பதக்கம் வென்று இருக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்காக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் நான் 192 கிலோ எடையை தூக்கினேன். அதனை ஒலிம்பிக் போட்டியில் தூக்கி இருந்தால் எனக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்து இருக்கும். ஆனால் அதனை நான் செய்யவில்லை. அது எனக்கு முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். அதனால் பதற்றம் அடைந்து எடையை தூக்க முடியாமல் போய்விட்டது.
அடுத்த இலக்குஜனவரி மாதம் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு தான் வீட்டுக்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன். உலக போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது கனவாகும். அதனை செய்து விட்டேன். எனது அடுத்த இலக்கு காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே ஆகும்.
இவ்வாறு மீராபாய் சானு தெரிவித்தார்.
இந்திய பளுதூக்குதல் பெடரேஷன் தலைவர் பிரேந்திர பிரசாத் பேசுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளில் மீராபாய் சானுவிடம் 45 முறை ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. எல்லா சோதனைகளிலும் அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகிறேன்’ என்று கூறினார்.